இன்றும் (10) நாளையும் (11) 1 1/2 மணி நேரம் மின் விநியோகத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த மின் விநியோக துண்டிப்பு பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடையில் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு இதற்கு அனுமதி வழங்கியுள்ளளது.
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் மீண்டும் தேசிய மின் அமைப்புடன் இணைக்கப்படும் வரை இந்த மின் விநியோக துண்டிப்பை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் நேற்றையதினம் (09) ஏற்பட்ட மின்சாரத் தடை காரணமாக, நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தின் 3 மின்பிறப்காக்கி தொகுதிகளும் செயற்பாட்டை நிறுத்தியிருந்தது.
குறித்த நிலக்கரி மின் நிலையமானது, பாரிய குளிர்விக்கும் தொகுதிகளை கொண்டுள்ளதோடு, இவ்வாறு மின் பிறப்பாக்கியின் இயக்கம் நிறுத்தப்படும் போது அதன் இயக்கமும் தன்னியக்கமாக நின்று விடுகின்றது.
குறித்த குளிர்விக்கும் தொகுதியானது, மீண்டும் இயங்க அது முற்றாக இயற்கையாக குளிர்வடைய வேண்டும் என்பதுடன், இதற்கு 2-3 நாட்கள் வரையான கால அவகாசம் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக, தேசிய மின்கட்டமைப்புக்கு நுரைச்சோலை மின்சார உற்பத்தி நிலையம் வழங்கும் 900MW மின்சார விநியோகம் கிடைக்காத நிலையில், இவ்வாறு மின் வெட்டை அமுல்படுத்த நேரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment