வன்னியில் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் வன்னியைச் சேர்ந்த ஆசிரியர்கள் பலர் வட மாகாணம் தவிர்ந்த ஏனைய வெளி மாவட்டங்களில் கடமையாற்றி வருவதைச் சுட்டிக்காட்டிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இவ்வாறு வட மாகாணம் தவிர்ந்த வெளி மாவட்டங்களில் கடமையாற்றும் வன்னி ஆசிரியர்களை வன்னியிலேயே கடமையில் ஈடுபடுத்தினால், வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்து வன்னியில் சேவையில் ஈடுபடும் ஆசிரியர்களின் தொகையினைக் குறைக்க முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் வெளி மாவட்டங்களில் பணியாற்றும் வன்னி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், வெளி மாவட்டங்களிலிருந்து வன்னிக்கு வருகை தந்து பணியாற்றும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் தீர்ப்பதாகவும் அமையுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது ஆலோசனையும் வழங்கியுள்ளார்.
முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் பொது அமைப்புக்களாலும், அரசஅதிகாரிகளாலும் சுட்டிக்காட்டப்பட்ட நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வன்னிப் பகுதிகளில் அதிகளவில் ஆசிரியர் பற்றாக்குறைகள் காணப்படுகின்றன.
இந்நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து பெருமளவான ஆசிரியர்கள் வருகை தந்து எமது வன்னி பகுதிகளில் அர்ப்பணிப்புடன் தமது சேவைகளை வழங்கி வருகின்றார்கள். அதற்காக அவர்களைப் பாராட்டுகின்றோம்.
இருப்பினும் வன்னியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏறக்குறைய 25 விஞ்ஞான பாட ஆசிரியர் பற்றாக்குறையும், மன்னாரில் ஏறக்குறைய 25 விஞ்ஞான பாட ஆசிரியர்கள் பற்றாக்குறையும், வவுனியாவில் ஏறக்குறைய 40 விஞ்ஞான பாட ஆசிரியர்கள் பற்றாக்குறைகளும் காணப்படுவதாக அறிகின்றோம்.
ஆனால் யாழ்ப்பாணத்தில் ஆசிரியர்கள் மேலதிமாக இருக்கின்ற நிலைகளும் காணப்படுகின்றன.
ஆனால் இவ்வாறு வன்னிப் பகுதிகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படும் நிலையில், வன்னிப் பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் வட மாகாணம் தவிர்ந்த வெளி மாவட்டங்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலைகளையும் காணக்கூடியதாகவுள்ளது.
வன்னியைச் சேர்ந்த ஆசிரியர்களை வன்னியிலேயே சேவையில் ஈடுபடுத்தினாலே, வெளி மாவட்டங்களிலிருந்து அதிகளவில் வன்னிக்கு வருகை தந்து தமது சேவைகளைச் செய்துவரும் ஆசிரியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும்.
குறிப்பாக வன்னிப் பகுதிகளைச் சேர்ந்த விஞ்ஞான பாட ஆசிரியர்கள் பலர் புத்தளம், குருநாகல், கண்டி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் சேவையாற்றி வருவதாக அறிகின்றோம்.
அதனடிப்படையில் எனக்கு கிடைத்த தகவலின்படி முல்லைத்தீவைச் சேர்ந்த 10 விஞ்ஞான பாட ஆசிரியர்களும், மன்னாரைச் சேர்ந்த 10 விஞ்ஞான பாட ஆசிரியர்களும், வவுனியாவைச் சேர்ந்த 08 விஞ்ஞான பாட ஆசிரியர்களும் இவ்வாறு வெளி மாவட்டங்களில் சேவையாற்றி வருகின்றனர்.
வன்னியிலேயே அதிகளவிலான ஆசிரியர் பற்றாக்குறைகள் காணப்படுகின்றன. வன்னியைச் சேர்ந்தவர்களை வன்னியில் சேவையில் ஈடுபடுத்தினால் அவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்நிலைமைகள் தீர்வதுடன், வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்து வன்னியில் சேவையில் ஈடுபடும் ஆசிரியர்களையும் குறைக்க முடியும்.
இவ்வாறு வெளி மாவட்டங்களில் சேவையில் ஈடுபடும் எமது வன்னியைச் சேர்ந்த ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சிக்கல் நிலமைகளை நாம் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அதேபோல் வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்து எமது வன்னிப் பகுதிளில் சேவையாற்றி வரும் ஆசிரியர்களுடைய சிக்கல் நிலமைகளையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது.
எனவே இவ்வாறு வெளி மாவட்டங்களில் கடமையாற்றும் எமது வன்னிப் பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர்களை வன்னிப் பகுதியிலேயே சேவையில் ஈடுபடுத்தும் ஒழுங்குகளை உரியவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறான ஒழுங்குபடுத்தல்களை மேற்கொள்வதனூடாக வன்னிப் பகுதிகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறைகளும் பூத்தியாவதுடன், வெளி மாவட்ட மற்றும், வன்னிப் பகுதி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சிக்கல்நிலைக்கும் தீர்வு கிடைப்பதாக அமையும் என்றார்.
No comments:
Post a Comment