பள்ளிவாசல்களை அரசியல்வாதிகள் கையகப்படுத்துவது மிகவும் ஆபத்தானது : முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 27, 2025

பள்ளிவாசல்களை அரசியல்வாதிகள் கையகப்படுத்துவது மிகவும் ஆபத்தானது : முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம்

பள்ளிவாசல்களை அரசியல்வாதிகள் கையகப்படுத்துவது மிகவும் ஆபத்தானது என அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

இவ்விடயம் குறித்து அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் தலைவர் எம்.என்.எம். ஷாம் நவாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"முஸ்லிம்களைப் பொறுத்தவரை இறை இல்லங்கள் என்பது அல்லாஹ்வை வழிபடுவதற்காக அல்லாஹ்வும் ரஸுலும் காட்டிய வழிமுறையை முஸ்லிம் சமூகத்தை வழிநடாத்துவதற்கான உருவாக்கப்பட்டிருக்கின்ற இறை இல்லங்களாகும்.

இந்த இறை இல்லங்கள் ஆன்மீக ரீதியான, சமூக ரீதியான மற்றும் சமூகத்தோடு சம்பந்தப்பட்ட பல்வேறு விவகாரங்களில் அவ்வப்போது சமூகத்துக்கு தேவைப்படுகின்ற ஒத்துழைப்பை, வழிகாட்டலை, பங்களிப்பைச் செய்வதுதான் பள்ளிவாசலுடைய பிரதான பணியாக இருக்கின்றது.

அண்மைக் காலமாக பள்ளிவாசல்கள் என்பது வெறுமனே தொழுகைக்காக மட்டும் என்றிருந்த நிலை மாறி, பள்ளிவாசல்கள் சமூக மத்திய நிலையங்களாக மாறி வருகின்ற இக்காலப் பகுதியில் அதனுடைய உண்மையான அந்தப் பணியை சமூகம் எடுத்துக்கொள்ளும் வகையில் அதற்குப் பொருத்தமான புத்திஜீவிகளையும் உலமாக்களையும் தகுதியானவர்களையும் அடையாளம் கண்டு நிர்வாக சபைக்குத் தெரிவுசெய்வது மக்களுடைய கடமையும் பொறுப்புமாகும்.

இந்த நோக்கத்தைப் புறக்கணிக்கும் வகையில் அரசியல்வாதிகளுடைய அல்லது கட்சி சார்ந்தவர்களுடைய திட்டங்களை நிறைவேற்றும் வகையில் பள்ளிவாசல் நிர்வாகிகளைத் தெரிவு செய்வதும் அமைப்பதும் என்பது உண்மையிலேயே கண்டிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

ஆகவே, பள்ளிவாசல்கள் இத்தகைய நிலைமைக்குச் செல்வதை விட்டு சுதந்திரமான முறையில் செயற்படுகின்ற ஒரு நிறுவனமாக கட்டி எழுப்புவதற்கு எல்லா மக்களும், சிவில் சமூகத் தலைமைகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதை வினயமாக வேண்டிக்கொள்கின்றோம்" என்றார்.

No comments:

Post a Comment