பாராளுமன்றத்தில் இன்று (06) பிரதி சபாநாயகரைப் பார்த்து ”நடுவில் பாய வேண்டாம்” என எதிர்க்கட்சித் தலைவர் கூறியதற்கு சபை முதல்வர் எதிர்ப்பை வெளியிட்டதால் சபையில் சர்ச்சையுடன் அமைதியின்மை ஏற்பட்டது.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலைச் சம்பவம் தொடர்பில் பிரதமரிடம் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வியெழுப்பியபோது, சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் மொஹமட் ரிஷ்வி சாலி அவ்வேளையில் ஏதோ கூற முயன்றபோது “நடுவில் பாய வேண்டாம்” என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறியதைத் தொடர்ந்து, அந்த வசனத்தை எதிர்க்கட்சித் தலைவர் வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சபை முதல்வர் கேட்டுக் கொண்டார்.
அதனையடுத்து அங்கு ஏற்பட்ட சர்ச்சைவினால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் பிரதமரிடம் கேள்வியெழுப்பியபோது, “ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை சம்பவம் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கை என்ன? இந்த கொலை சம்பவம் தொடர்பில் அரசாங்கம் தலையிட்டு வெளிப்படையான விசாரணைகளை நடத்தி அவரின் குடும்பத்தினருக்கும் ஊடகத்துறைக்கும் நீதி, நியாயத்தை நிலைநாட்டி குற்றவாளிகளை சட்டத்தின்முன் கொண்டுவர அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் என்ன?” என வினவினார்.
அவ்வேளையில் குறுக்கிட்ட பிரதி சபாநாயகர் மொஹமட் ரிஷ்வி சாலி, ”எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே” என்று கூறும்போது அவருக்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் தயவு செய்து இடையே பாயாது ஒரு நிமிட நேரத்தை எனக்கு தாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
இதன்போது எழுந்த சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இந்த சபையில் நிறைய சண்டியர்கள் உள்ளனர். ஒருவர் சபாநாயகரை பார்த்து வெட்கம் என்று கூறுகின்றார். இன்று ஒருவர் ஆளும் கட்சி பிரதம கொரடாவுக்கு ஏதோ கூறுகின்றார்.
இப்போது எதிர்க்கட்சித் தலைவர் பிரதி சபாநாயகருக்கு ‘இடையில் பாயாமல் இருங்கள்” என்கிறார்.
அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் தமது வசனத்தை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் பிரதமரிடம் கேள்வியெழுப்பும்போது பிரதி சபாநாயகர் ஏதோ நேரம் தொடர்பில் ஏதோ கூற வந்தார். அதனை நீங்கள் விமர்சிக்கின்றீர்கள். நீங்கள் பிரதி சபாநாயகரிடம் மன்னிப்பு கோர வேண்டும் அல்லது அந்த வசனத்தை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும். இங்கே சண்டித்தனம் கூடாது என்றார்.
சபை முதல்வர் அவ்வாறு தெரிவித்ததை தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.
இவ்வேளையில் அனைவரையும் அமைதியாக இருக்குமாறு அறிவித்த பிரதி சபாநாயகர், நீங்கள் என்னை அவமதிக்கவில்லை. இந்த ஆசனத்தையே அவமதிக்கின்றீர்கள். ஒருவர் இந்த ஆசனத்தை பார்த்து வெட்கம் என்று கூறி அவமதித்துள்ளார். நீங்கள் அமருங்கள். நான் கூறுவதை கேளுங்கள். இந்த சபையின் ஒழுங்கை பேணுங்கள் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவரான உங்களிடம் இருந்து அந்த வசனம் வெளியானமை தொடர்பில் நான் அதிர்ச்சியடைந்தேன். நீங்கள் என்னைப் பார்த்து கூறாவிட்டாலும் இந்த ஆசனத்திற்கே கூறியுள்ளீர்கள். அதனை நீக்கிக் கொள்ளுங்கள் என்றார்.
இதன்போது பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர், குறுக்கே பாய வேண்டாம் என்று நான் கூறினேன். அது உங்களின் ஆசனத்திற்கு அவமதிப்பாக இருந்தால் அதனை நான் வாபஸ் பெற்றுக் கொள்கின்றேன். எனக்கு வரட்டுக் கௌரவம் கிடையாது என்றார்.
அவ்வேளையில் பிரதி சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் அதனை வாபஸ் பெற்றுக் கொள்வதாக கூறியதை நான் வரவேற்கின்றேன். இது தொடர்பில் சகல இலங்கையர்களும் பெருமை கொள்வர் என்றார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment