2024 ஆம் ஆண்டில் 44,262 மெற்றிக் தொன் ஏற்றுமதி விவசாய உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு, 89,217 மில்லியன் ரூபாய் அந்நியச் செலாவணி வருமானம் ஈட்டப்பட்டதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் அபிவிருத்தி பணிப்பாளர் உபுல் ரணவீர தெரிவித்துள்ளார்.
கண்டி, பேராதெனிய, கெட்டம்பேயில் அமைந்துள்ள ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
இவர் மேலும் தெரிவிக்கையில், 2024 ஆம் ஆண்டில் அதிகளவான வருமானம் மிளகு ஏற்றுமதியில் இருந்து கிடைத்தது. அவ் ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்ட மிளகுகளின் அளவு 25,968 மெற்றிக் தொன், அதிலிருந்து கிடைத்த அந்நியச் செலாவணி 51,524 மில்லியன் ரூபாவாகும். மிளகு ஏற்றுமதியில் இருந்து இலங்கை ஒரு வருடத்தில் பெற்ற அதிகபட்ச வருமானம் இது.
மிளகு ஏற்றுமதியில் அதிக அளவு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மேலும், அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.
2023 ஆம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட மிளகின் அளவு 14,255 மெற்றிக் தொன், இதன் மூலம் ரூ. 29,329 மில்லியன் வருவாய் கிடைத்தது.
2023 உடன் ஒப்பிடும்போது 2024 இல் ஈட்டப்பட்ட அந்நியச் செலாவணியின் அளவு 75.67 சதவீதம் அதிகரித்துள்ளது
2023 உடன் ஒப்பிடும்போது 2024 இல் ஏற்றுமதி செய்யப்பட்ட மிளகின் அளவு 82.23 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும், இந்த ஆண்டு, 8,852 மெற்றிக் தொன் பாக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, 11,598 மில்லியன் ரூபா வருமானமும், 2,317 மெற்றிக் தொன் சாதிக்காய் ஏற்றுமதி செய்யப்பட்டு, 4,648 மில்லியன் ரூபா வருமானமும், மஞ்சள், இஞ்சி, காபி, ஏலக்காய், கிராம்பு, வெணிலா, வெற்றிலை, கோகோவா உள்ளிட்ட உற்பத்திகள் 7,023 மெற்றிக் தொன் ஏற்றுமதி செய்யப்பட்டு, 20,526 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டபட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment