ரணிலின் 33 வெளிநாட்டுப் பயணங்களுக்கு 533 மில்லியன் ரூபா செலவு : முன்னாள் ஜனாதிபதிகளின் செலவுகளை பட்டியலிட்டார் பிரதமர் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 27, 2025

ரணிலின் 33 வெளிநாட்டுப் பயணங்களுக்கு 533 மில்லியன் ரூபா செலவு : முன்னாள் ஜனாதிபதிகளின் செலவுகளை பட்டியலிட்டார் பிரதமர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது இரண்டு ஆண்டுகள் பதவிக் காலத்தில் மேற்கொண்ட 33 வெளிநாட்டுப் பயணங்களுக்கு 533 மில்லியன் ரூபா நிதியை செலவிட்டுள்ளதாக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இப்பயணங்களில் 154 பேர், அவருடன் சென்றிருந்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி செலவின தலைப்பு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கொண்ட 03 வெளிநாட்டுப் பயணங்களில் 11 பேர் மாத்திரமே பங்கேற்றனர். இதற்காக 1.8 மில்லியன் ரூபா நிதி மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது.

நாட்டில் அரசியல் ரீதியான அரச முறை பயணங்களில் கடந்த காலங்களில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன.

2010 முதல் 2014 வரையான காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்க்ஷவின் வெளிநாட்டு பயணங்களுக்காக 3572 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

மேலும் 2015 முதல் 2019 வருட காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக 384 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

2020 முதல் 2022 வருட காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக 126 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது

2023 முதல் 2024 காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டு பயணங்களுக்காக 533 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கொண்ட 3 வெளிநாட்டு பயணங்களில் 11 பேர் மாத்திரமே பங்குபற்றியுள்ளனர். இதற்கு 1.8 மில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது. 

பதவிக்கான சிறப்பு சலுகையின் சுமையை மக்கள் மீது நாங்கள் சுமத்தவில்லை என்றும் அதுவே அரசியல் கலாசாரத்தின் ஆரம்ப மாற்றமாகும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் பல விடயங்களை முன்வைத்துள்ளது. எனினும் எதிர்க்கட்சியினர், ஐந்தாண்டு பதவிக் காலத்தை நாம் நிறைவு செய்ததைப் போன்று விடயங்களை முன்வைக்கின்றார்கள். ஆரம்ப காலத்துக்கான முக்கியமான தீர்மானங்கள் மாத்திரமே தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு தயாரிப்பு தொடர்பில் பல்வேறு கருத்துக்களை எதிர்தரப்பினர் சபையில் குறிப்பிடுகின்றார்கள். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்று தெளிவாக நாம் குறிப்பிட்டுள்ளோம். 

நாட்டில் அனைத்து மக்களின் பங்கேற்புடனேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இதற்கான செயற்பாடுகளை உரிய காலத்தில் முன்னெடுப்போம்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment