ஜனாதிபதி வேட்பாளர்கள் 13 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 4, 2025

ஜனாதிபதி வேட்பாளர்கள் 13 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

(இராஜதுரை ஹஷான்)

தேர்தல் செலவுகளை ஒழுங்குப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் தேர்தல் பிரசார செலவினங்களை சமர்ப்பிக்காத 13 ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் செலவின விபரங்களை சமர்ப்பிக்காத 1064 வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் திங்கட்கிழமை (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, தேர்தலில் வாக்களிக்கும் முறைமை தொடர்பில் வாக்காளர்களுக்கு தெளிவுபடுத்தும் பல்வேறு செயற்திட்டங்களை நடைபெற்று முடிந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின்போது முன்னெடுத்தோம்.

இருப்பினும் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் நிராகரிக்கப்படும் வாக்குகளின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகிறது. அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் பெருமளவிலான வாக்குகளில் நிராகரிக்கப்படுவது தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

ஆகவே தேர்தலில் வாக்களிக்கும் முறைமை தொடர்பில் வாக்காளர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு புதிய உத்திகளை கையாள்வது தொடர்பில் புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் 2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவுகளை ஒழுங்குப்படுத்தும் சட்டம் முதன் முறையாக அமுல்படுத்தப்பட்டது.

இந்த சட்டத்தின் பிரகாரம் தேர்தல் பெறுபேறுகள் வெளியாகி 21 நாட்களுக்குள் குறித்த வேட்பாளர் தமது தேர்தல் பிரச்சார செலவினம் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்களில் 13 வேட்பாளர்கள் தமது தேர்தல் பிரச்சார செலவினம் தொடர்பான விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கவில்லை.

இவர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டு, சட்டமா அதிபரின் ஆலோசனையுடன் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்களில் 1064 வேட்பாளர்கள் தமது தேர்தல் பிரச்சார செலவினம் தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்கவில்லை.

இவர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபருடன் வழக்குத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உத்தேச உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுகளை ஒழுங்குப்படுத்தும் சட்டம் குறித்து தெளிவுப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment