மண்முனைபற்று - ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவின் முஸ்லிம் பகுதிகளில் உட் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் அதேவேளை நோன்பு கால இரவு வணக்கத்தை கருத்திற் கொண்டு வீதி விளக்குகள் பொறுத்தி ஒளியூட்டுமாறு பாராளுமன்ற உறுப்பினர் நளீம் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்தார்.
மண்முனைப்பற்று - ஆரையம்பதி பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் பிரதேச செயலாளர் திருமதி கௌரி தினேஷ் ஒழுங்கமைப்பில் அபிவிருத்தி குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே பாராளுமன்ற உறுப்பினர் நளீம் வேண்டுகோளை முன்வைத்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மத் சாலி நளீம் மேலும் அங்கு பேசுகையில், இப்பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் கிராமங்களான கங்கேயேனோடை, ஒல்லிக்குளம், கீச்சான் பள்ளம், பாலமுனை, சிகரம், செல்வாநகர் கிழக்கு ஆகிய பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படல் வேண்டும், வடிகாண்கள் சீரமைக்கப்பட்டு பேண்தகு அபிவிருத்தி செயற்பாடுகள் மேற்கொள்ளபட வேண்டும், உள்ளக வீதிகள் பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் இருப்பதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர், இப்பகுதிகளில் உள்ள நோயாளர்கள் நலன் கருதி போக்குவரத்து சபை மட்டக்களப்பு சாலையால் முன்னெடுக்கப்பட்ட போதனா வைத்தியசாலைக்கான பேருந்து சேவையினை மீள தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை அபிவிருத்தி குழுத் தலைவர் உடன் மேற்கொள்ள வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அத்துடன், முஸ்லிம்களின் புனித மாதமான நோன்பு காலம் நெருங்குவதால் இக்காலப்பகுதியில் இரவு நேர வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டிய அவசியம் உள்ளதால், இதற்காக குறித்த பகுதிகளில் இருள் சூழ்ந்த மற்றும் அச்சநிலை உள்ள பகுதிகளில் வீதி மின் விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச சபை செயலாளர், மின்சார சபை பிரதேச பொறுப்பாளர் ஆகியோரிடம் பாராளுமன்ற உறுப்பினர் நளீம் வேண்டுகோள் விடுத்தார்.
குறித்த அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீநாத் உட்பட திணைக்கள தலைவர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment