யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பாக ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும், இக்குழு அமைக்கப்பட்டு அதன் அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை (07) காலை 9.30 சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியது இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த ஒழுங்குப்பிரச்சினை தொடர்பாக, எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக்க சபாநாயகரிடம் தெரிவித்த விடயங்களுக்கு பதிலளிக்கையிலேயே சபாநாயகர் இதனை தெரிவித்தார்.
ஒழுங்கு பிரச்சனையை முன்வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, “பாராளுமன்ற அமர்வுகளில் சபையில் உரையாற்றுவதற்காக எனக்கு நேரம் ஒதுக்கப்படுவதில்லை. அந்த வகையில் டிசம்பர் 18 ஆம் திகதி எனது சிறப்புரிமை மீறல் சம்பந்தமாக சபாநாயகரிடம் தெரிவித்துள்ளேன். எனினும், இன்று வரையில் அதற்கு பதிலளிக்கப்படவில்லை. ஜனவரி 07ஆம் திகதியான இன்று வரை எனக்கு சபையில் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. அதனால் நான் பாராளுமன்றத்திற்கு வருவதில் எதுவித பயனுமில்லை என நினைக்கின்றேன்.
நான் பாராளுமன்ற அமர்வுகளுக்காக யாழ்ப்பாணத்திலிருந்து வருகின்றேன். ஆனால், எனக்கு இதில் எந்தவித பயனும் இல்லை. சபையில் வந்து அமர்ந்து மேலே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வீட்டுக்குப் போக முடியாது. ஆகையால், எனக்கு முறையான பதில் வழங்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த சபாநாயகர், இது தொடர்பான பதிலை வழங்குவதற்கான யோசனையை எதிர்க்கட்சித் தலைவருக்கு அறிவித்துள்ளோமென குறிப்பிட்டார்.
இதன்போது, குறுக்கிட்ட எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க, “எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சித் தலைவரும் சபாநாயகரை சந்தித்து கலந்துரையாடும்போது இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளோம்.
இந்த விவகாரம் குறித்து நாம் சபாநாயகரின் ஆலோசனையை எதிர்பார்க்கின்றோம். எதிர்க்கட்சி என்ற ரீதியில் இது தொடர்பாக எழுத்து மூலமும் சபாநாயகரிடம் அறிவித்துள்ளோம்” என குறிப்பிட்டார்.
இதன்போது, மீண்டும் ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்த அர்ச்சுனா எம்.பி, எதிர்க்கட்சியினால் பாராளுமன்றத்துக்குள் எனக்கு உரையாற்றுவதற்கே நேரம் ஒதுக்கப்படவில்லை என்றால் எவ்வாறு நாம் ஒன்றாக இணைந்து நாட்டை முன்கொண்டு செல்வோமென எதிர்பார்க்க முடியும் என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர், எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவால் முன்வைக்கப்பட்ட விடயத்துக்கமைய நாம் அர்ச்சுனா எம்.பி தொடர்பாக குழுவொன்றை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளோம். அந்தக் குழு அமைக்கப்பட்டு அதன் அறிக்கை கிடைத்ததன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment