ரோஹிங்கிய அகதிகளை வெளியேற்றும் முயற்சியை அரசாங்கம் நிறுத்த வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 7, 2025

ரோஹிங்கிய அகதிகளை வெளியேற்றும் முயற்சியை அரசாங்கம் நிறுத்த வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மியன்மாரில் இருந்து அகதிகளாக வந்திருக்கும் ரோஹிங்கிய பிரஜைகளை மீள திருப்பி அனுப்புவது சர்வதேச மனித உரிமைச் சட்டத்தை மீறும் விடயமாகும். அதனால் அவர்களை வெளியேற்றும் முயற்சியை உடனடியாக அரசாங்கம் நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) இடம்பெற்ற வருட ஆரம்ப நிதிநிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், மியன்மாரிலிருந்து ரோஹிங்கிய பிரஜைகள் சிலர் அகதிகளாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு பிரதேசத்துக்கு வந்திருக்கின்றனர்.

அவர்களை உடனடியாக வெளியேற்றும் கொள்கையை மேற்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக எமக்கு அறியக்கிடைக்கிறது. அவ்வாறான மனிதநேயமற்ற செயற்பாட்டுக்குச் செல்ல வேண்டாம் என அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.

அகதிகளாக வந்திருக்கும் ரோஹிங்கிய பிரஜைகளை மீள திருப்பி அனுப்புவது மனித உரிமையை மீறும் செயலாகும். சர்வதேச மனித உரிமைச் சட்டத்தை மீறும் விடயமாகும். விசேடமாக முழு உலகமும் ஏற்றுக் கொண்டுள்ள விடயம்தான், ரோஹிங்கிய பிரஜைகள் வேறுபட்ட துன்புறுத்தல்கள் பாதிப்புக்களுக்கு ஆளாகிய பிரிவினர். அவர்களை பலவந்தமாக எங்களுக்கு வெளியேற்ற முடியாது.

1951 அகதிகள் ஒப்பந்தம் இருக்கிறது. சர்வதேச மனித உரிமை வரைபுக்குள் இருந்து நாங்கள் செயற்பட வேண்டி இருக்கிறது. அதனால் அவர்களை வெளியேற்றும் முயற்சியை உடனடியாக அரசாங்கம் நிறுத்த வேண்டும்.

ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பு மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் கலந்துரையாடி, பாதிக்கப்பட்டிருக்கும் ராேஹிங்கியா பிரஜைகளுக்கு வழங்க வேண்டிய மனிதாபிமான நடவடிக்கைகளைப் பெற்றுக் கொடுக்க நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment