மீனவர்கள் மீதான துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இந்தியா கண்டனம் : இலங்கை பதில் உயர்ஸ்தானிகர் புது டில்லிக்கு அழைக்கப்பட்டு எதிர்ப்பு வெளியீடு - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 28, 2025

மீனவர்கள் மீதான துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இந்தியா கண்டனம் : இலங்கை பதில் உயர்ஸ்தானிகர் புது டில்லிக்கு அழைக்கப்பட்டு எதிர்ப்பு வெளியீடு

இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையின்போது இலங்கை கடற்படை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிப்பதாக, இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நெடுந்தீவுக்கு அருகாமையில் இன்று அதிகாலை 13 இந்திய மீனவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளின்போது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

குறித்த மீன்பிடிப் படகிலிருந்த 13 மீனவர்களில் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை சிறு காயங்களுக்குள்ளான ஏனைய மூன்று மீனவர்களுக்கும் அதற்காக சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மீனவர்களைப் பார்வையிட்ட யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய கொன்சுலேட் ஜெனரல் காரியாலய அதிகாரிகள், அவர்களை நலன் விசாரித்து அவர்களது தேவைகள் குறித்து அறிந்துகொண்டு மீனவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்குமான சகல சாத்தியமான உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.

புது டில்லியில் உள்ள இலங்கையின் பதில் உயர் ஸ்தானிகர் இன்று காலை வெளியுறவுத்துறை அமைச்சுக்கு அழைக்கப்பட்டு இச்சம்பவம் தொடர்பாக கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் கொழும்பில் உள்ள எமது உயர்ஸ்தானிகராலயம் இவ்விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளது.

வாழ்வாதாரம் தொடர்பான அக்கறையினை கவனத்தில் கொண்டு மீனவர்கள் விவகாரத்தினை பரிவுடனும் மனிதாபிமான அடிப்படையிலும் அணுக வேண்டியதன் அவசியத்தை இந்திய அரசாங்கம் எப்பொழுதும் வலியுறுத்தி வருகின்றது. 

எந்த சந்தர்ப்பத்திலும் எக்காரணத்துக்காகவும் பலத்தை பயன்படுத்துவதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்விடயம் தொடர்பாக இரு நாடுகளினதும் அரசாங்கங்கள் இடையில் ஏற்கனவே உள்ள புரிந்துணர்வுகள் மிகவும் இறுக்கமாக கடைப்பிடிக்கப்படவேண்டும் என உயர் ஸ்தானிகராலயம் அறிக்கை விடுத்துள்ளது.
ஆயினும், நேற்று இரவு இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த வேளையில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தின்போது இந்திய மீனவர் ஒருவர், இலங்கை கடற்படை வீரருடன் மல்லுக்கு நின்ற வேளையில், அவரது கடமைக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடற்படை அதிகாரியினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது மீனவர்கள் இருவரின் கால்களில் காயம் ஏற்பட்ட நிலையில், அவர்கள் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஏனைய 11 பேர் மற்றும் பல நாள் மீன்பிடி படகுகள் உள்ளிட்டவை கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளாதாக, குறித்த முறைப்பாட்டின் போது வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment