ஊடகத்துறை அமைச்சர் அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் - ஐக்கிய மக்கள் சக்தி - News View

About Us

About Us

Breaking

Sunday, January 5, 2025

ஊடகத்துறை அமைச்சர் அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் - ஐக்கிய மக்கள் சக்தி

(எம்.மனோசித்ரா)

ஊடகவியலாளர்களின் உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, அவற்றை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டு அக்கட்சி இதனை வலியுறுத்தியுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தேசிய பத்திரிக்கை ஒன்றில் வெளியான செய்தியின் அடிப்படையில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ விடுத்த அச்சுறுத்தலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதாக உறுதியளித்த தற்போதைய அரசாங்கம், அவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்காத ஊடக நிறுவனங்களுக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது.

1988 மற்றும் 1989 ஆட்சியின்போது, ஜே.வி.பி.யின் கட்டளைகளுக்கு எதிராக செயற்பட்ட டெவிஸ் குருகே, சாகரிகா கோமஸ், குலசிறி அமரதுங்க, பிரேம கீர்த்தித அல்விஸ் போன்ற ஊடகவியலாளர்களுக்கு துப்பாக்கிகளால் பதிலளிக்கப்பட்டது.

இன்று துப்பாக்கி ஏந்தியவாறு பதில் கூறாவிட்டாலும் வழமை போன்று ஊடகத்துறை அமைச்சர் அச்சுறுத்தல் அறிக்கைகள் மூலம் ஊடகங்கள் மீது அழுத்தம் பிரயோகிக்கின்றார்.

அத்துருகிரிய பொலிஸாரால் பிரஜை ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தி தவறாக இருந்தால் அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பதிலாக, தமக்கு எதிரான கருத்துக்களை கூறும் ஊடகங்கள் மீது துறைசார் அமைச்சராலேயே அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது.

ஊடகவியலாளர்களின் உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய ஊடகத்துறை அமைச்சர் இது போன்று செயற்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

No comments:

Post a Comment