(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
அரசியல்வாதிகளின் சிறப்புரிமைகள், சலுகைகளை குறைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கு கடந்த அரசாங்கங்களை காட்டிலும் இரட்டிப்பு சலுகைகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமை தொடர்பில் அரசாங்கம் திணறுவது அவசியமற்றது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் 2413/37 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதி, செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் சட்டத்தின் மீதான ஒழுங்குவிதிகள் உட்பட பல கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, கடந்த கால அரசாங்கங்களின் சிறப்புரிமைகள், தற்போதைய அரசாங்கத்தின் சிறப்புரிமைகள் பற்றியே அதிகளவில் தற்போது பேசப்படுகிறது.
சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு நகரில் மிகவும் முக்கியமான கட்டிடங்களை கைப்பற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்த கட்டிடங்கள் எவையென அவர் குறிப்பிட வேண்டும்.
பாராளுமன்றத்துக்கு உரித்தான சாவஸ்தி பாதுகாப்பு பிரிவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயன்படுத்தியுள்ளதாக சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்கையில் தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பாதுகாப்புக்கு சாவஸ்தி பாதுகாப்பு பிரிவு அமர்த்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் வீட்டின் மாத வாடகை மதிப்பு 46 இலட்சம் ரூபா என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. வாடகை கட்டணத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்புங்கள், வாடகை கட்டணத்தை செலுத்துவதா அல்லது வீட்டில் இருந்து வெளியேறுவதா என்பதை அவர் தீர்மானிப்பார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் வீடுகள் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேடைகளில் பேசுவதும், ஆளும் தரப்பினர்கள் பாராளுமன்றத்தில் திணறுவதும் பயனற்றது.
அமைச்சர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சிறப்புரிமைகளை குறைப்பதாகக் குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களின் சலுகைகளை அதிகரித்துள்ளது. இதற்கான சுற்றறிக்கையை ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் அமைச்சருக்கு 3 வாகனங்களும், அவரது சேவையாளர்களுக்கு 5 வாகனங்களும் என்ற அடிப்படையில் 8 வாகனங்களும், இராஜாங்க அமைச்சர்களுக்கு 3 வாகனங்களும்,அவர்களின் சேவையாளர்களுக்கு 4 வாகனங்களும் என்ற அடிப்படையில் 7 வாகனங்களும் வழங்கப்பட்டன.
இந்த அரசாங்கம் அமைச்சரவை அமைச்சர்களுக்கு 10 வாகனங்களையும், பிரதி அமைச்சர்களுக்கு 8 வாகனங்களையும் வழங்கும் வகையில் சுற்றறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கமைய அமைச்சு மற்றும் பிரதி அமைச்சர்களின் பாவனைகளுக்கு 414 வாகனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு வாகனம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டார். அமைச்சர் செல்லும்போது அவரது வாகனத்துக்கு முன்பாகவும், பின்னாலும் வாகனம் செல்ல வேண்டிய தேவை கிடையாது என்று குறிப்பிட்டார். தற்போது வானத்தில் பறப்பதற்கா இத்தனை வாகனங்கள் வழங்கப்படுகிறது என கேள்வியெழுப்பினார்.
No comments:
Post a Comment