ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் அகதி முகாமில் இஸ்ரேலின் படை நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில் மேலும் இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டு சுமார் 2,000 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
காசாவில் 15 மாதங்களுக்கு மேல் இஸ்ரேல் நடத்திய சரமாரித் தாக்குதல்கள் முடிவுக்கு வந்து கடந்த ஞாயிறு தொடக்கம் அங்கு போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த நிலையிலேயே மேற்குக் கரையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் இடம்பெற்று வரும் படை நடவடிக்கையில் புல்டோசர் கொண்டு வீதிகள் தோண்டப்பட்டு மருத்துவமனைகள் முற்றுகையிடப்பட்டு இஸ்ரேலியப்படை தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஜெனினின் நிலைமை ‘மிகக் கடுமையாக உள்ளது’ என்று ஜெனின் ஆளுநர் கமால் அபூ அல் ருப் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
‘ஜெனின் (அகதி) முகாமுக்குச் செல்லும் அனைத்து வீதிகளையும் ஆக்கிரமிப்புப் படை புல்டோசர் கொண்டு தகர்த்திருப்பதோடு ஜெனின் அரச வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன’ என்று அவர் கூறினார்.
ஜெனினுக்கு அருகில் உள்ள கிராமங்களில் இருந்து சுமார் 20 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘பயங்கரவாத உட்கட்டமைப்பு தளங்கள்’ மீது வான் தாக்குதல்களை நடத்தியதாகவும் வீதிகளில் வைக்கப்பட்ட பல வெடி பொருட்களையும் செயலிழக்கச் செய்ததாகவும் இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘இஸ்ரேலியப் படை அங்கு தொடர்ந்து படை நடவடிக்கையை மேற்கொள்வதாகவும்’ அது குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை மேற்கு ஜெனினில் வைத்து கடந்த புதன்கிழமை இரவு மேலும் இரு பலஸ்தீனர்கள் இஸ்ரேல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று பலஸ்தீன உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.
இதன்போது இஸ்ரேலியப் படை வீடு ஒன்றை இலக்கு வைத்து ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணை மற்றும் செல் தாக்குதல்களை நடத்திய பின்னர் சிறப்புப் படையினர் அந்த வீட்டை சுற்றிவளைத்து அங்கிருப்பவர்களை வெளியேற உத்தரவிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அந்த வீட்டை புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்கியபோது இரு சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக மேற்படி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதல்களில் ஜெனின் அகதி முகாமில் பத்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் தற்போது முன்னெடுக்கப்படும் ‘இரும்புச் சுவர்’ படை நடவடிக்கையில் இஸ்ரேலியப் படை காசா போரின்போது கற்றுக்கொண்ட விடயங்களை பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ராயேல் காட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலிய படை ஜெனின் அகதி முகாமில் வான் தாக்குதல்கள் உட்பட மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் போர் முறைகளை பயன்படுத்தி வருவதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் புதனன்று குறிப்பிட்டிருந்தது.
ஜெனினில் இஸ்ரேல் முன்னெடுத்திருக்கும் பாரிய படை நடவடிக்கை சில நாட்களுக்கு முன் காசாவில் எட்டப்பட்ட பலவீனமான போர் நிறுத்தத்தை குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது என்று ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்திற்கான பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்தின் பணிப்பாளர் ரோலான்ட் பிரெட்ரிச் தெரிவித்துள்ளார்.
மறுபுறம் காசாவில் இடிபாடுகளில் இருந்து தொடர்ந்து சடலங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில் போர் நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் 162 சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக காசா சிவில் பாதுகாப்பு நிறுவனம் நேற்று தெரிவித்தது.
போதுமான கனரக உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் இன்றி குடியிருப்பாளர்கள் இடிபாடுகளில் உடல்களை தேடி வருவதாக அந்த நிறுவனம் கூறியது.
மஹ்மூத் அபூ டல்பா என்பவர் காசா போரின் ஆரம்ப மாதங்களில் இஸ்ரேலிய தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்ட தனது வீட்டில் சிக்கியுள்ள தனது மனைவி மற்றும் ஐந்து குழந்தைகளையும் தேடி வருகிறார்.
காசா நகரின் ஷஜையா புறநகரில் உள்ள கட்டடத்தின் மீது கடந்த 2023 டிசம்பரில் இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியபோது அபூ டல்பா தனது மனைவி, குழந்தைகள் உட்பட 35 குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளார்.
‘எனது குழந்தைகள் இன்னும் இடிபாடுகளுக்கு கீழ் உள்ளனர். அவர்களை வெளியே எடுக்க நான் தொடர்ந்து முயன்று வருகிறேன். சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் வந்து முயன்றார்கள், ஆனால் கடினமாக இருந்தது. உயிர்த்தியாகம் செய்தவர்களை வெளியே எடுப்பதற்கு போதுமான ஆயுதங்கள் எம்மிடம் இல்லை. எமக்கு அகழ்வு இயந்திரங்கள் மற்றும் பல தொழில்நுட்ப கருவிகளும் தேவையாக உள்ளன’ என்று அபூ டல்பா ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
15 மாதங்கள் நீடித்த இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களினால் காசாவில் உள்ள மக்கள் எந்த அடிப்படை வசதியும் இன்றி அவதிப்பட்ட நிலையில் போர் நிறுத்தத்தின் முதல் நான்கு நாட்களுக்குள் 3,200 உதவி லொறிகள் அந்தப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
மனிதாபிமான நிறுவனங்கள் காசாவில் உள்ள மையங்கள் ஊடாக இந்த உதவிகளை விநியோகித்து வருவதோடு அங்கு மக்கள் உதவிக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
No comments:
Post a Comment