(நா.தனுஜா)
அரசாங்கத்துக்காக பலர் தன்னார்வ அடிப்படையில் பணிபுரிவது பற்றி ஜனாதிபதி கூறுகிறார். ஆனால் இதனூடாக நீண்டகால அடிப்படையில் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. மாறாக அரச ஊழியர்களுக்கு உயர்வான சம்பளத்தை வழங்குவதன் ஊடாகவே அவர்களிடமிருந்து சிறப்பான வெளியீட்டைப் பெற்றுக் கொள்ள முடியும் என கடன், வர்த்தகம் மற்றும் பொருளியல் ஆய்வாளரும், கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளருமான உமேஷ் மொரமுதலி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் புதிய முயற்சிகள் மற்றும் செயற்திட்டங்களில் வர்த்தகர்கள், துறைசார் நிபுணர்கள் பலர் ஊதியமின்றி, தன்னார்வ அடிப்படையில் பணியாற்றுவது குறித்து 'எக்ஸ்' தளத்தில் கருத்து வெளியிட்டிருக்கும் உமேஷ் மொரமுதலி மேலும் கூறியிருப்பதாவது:
அரசாங்கத்துக்காக பலர் தன்னார்வ அடிப்படையில் பணிபுரிவது குறித்து ஜனாதிபதி கூறுகிறார். இருப்பினும் உண்மையில் அது பிரச்சினைக்குரியதொரு விடயமாகும். ஏனெனில் வலுவான அரச கட்டமைப்பை உருவாக்க வேண்டுமெனில், ஊழியர்களுக்கு ஏற்புடைய நியாயமான சம்பளத்தை வழங்க வேண்டும். அதனூடாகவே உயர் திறனுடைய ஊழியர்களை அரச சேவையில் உள்ளீர்க்க முடியும். எனவே பிரபல வணிகர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தை முன்கொண்டு செல்வதை விடுத்து, இதுவே நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான நிலையான தீர்வாக அமையும்.
தற்போது அரச சேவையில் திறனுடைய ஊழியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவு மிகக்குறைவான மட்டத்திலேயே காணப்படுகிறது. அதனால் திறமையும், தகுதியும் உடைய பலர் அரசசேவையில் இணைவது தடைப்பட்டு, அவர்கள் தனியார் துறையில் இணைகிறார்கள். இதுவே வலுவான அரச சேவையைக் கட்டியெழுப்புவதில் அரசாங்கத்துக்கு இருக்கும் மிக முக்கிய சவாலாகும்.
இலங்கை மத்திய வங்கி மிகச்சிறப்பாக இயங்கி வருகிறது. அதற்கு மிக முக்கிய காரணம் மத்திய வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளமாகும். ஏனைய அரச ஊழியர்களுக்கான சம்பளத்துடன் ஒப்பிடுகையில் அவர்களுக்கான கொடுப்பனவு மிக உயர்வு என்பதுடன், கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புக்களும் வழங்கப்படுகின்றன. அதற்குப் பதிலாக அந்த ஊழியர்கள் சிறப்பாகப் பணியாற்றுகின்றனர்.
இந்நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எந்தவொரு அரசாங்கம் விரும்பினாலும், அவர்கள் அரச ஊழியர்களுக்கு தற்போதைய சம்பளத்தை விட உயர்வான சம்பளத்தை வழங்க வேண்டும். மாறாக தன்னார்வ அடிப்படையில் பணிபுரிதல் என்பது நீண்டகால அடிப்படையில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு உதவாது என்று தெரிவித்துள்ளார்.
இதனை தானும் ஏற்றுக் கொள்வதாகக் குறிப்பிட்டிருக்கும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, குறுகியகால அடிப்படையில், விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் இந்நடைமுறை ஏற்புடையது என்றும், இருப்பினும் நீண்டகால அடிப்படையில் பயனளிக்காது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு இதேபோன்ற நடைமுறைகளையே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலும் அவதானிக்கமுடிந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment