இரண்டு மாதங்களாக கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்ற தகவல் கவலையளிக்கிறது : ஆளுநர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் இம்ரான் மகரூப் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 10, 2025

இரண்டு மாதங்களாக கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்ற தகவல் கவலையளிக்கிறது : ஆளுநர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் இம்ரான் மகரூப்

கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியைகளுக்கு கடந்த இரண்டு மாதங்களாக கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்ற தகவல் மிகவும் கவலை அளிக்கிறது. கிழக்கு மாகாண ஆளுநர் இது விடயத்தில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியைகளுக்கான மாதாந்தக் கொடுப்பனவு கடைசியாக மே மாதம் வழங்கப்பட்டதாகவும், ஜூன், ஜூலை மாதங்களுக்கான கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் முன்பள்ளி ஆசிரியைகள் எனது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். இது இந்த ஆசிரியைகளுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியாகும்.

கிழக்கு மாகாணத்தின் கல்விக்கு பலமான அத்திவாரம் இடுபவர்கள் முன்பள்ளி ஆசிரியைகள்தான். இவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை வழங்குவதில் ஏன் இந்த அரசாங்கம் பொடுபோக்காக உள்ளது?

கொடுப்பனவுக்கான நிதி இதுவரை விடுவிக்கப்படாததாலேயே கொடுப்பனவு தாமதம் நிலவுவதாக கூறப்படுகின்றது.

கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட முன்பள்ளி நிர்வாகமே இப்போது இயங்குகின்றது. எனவே ஆளுநரே இந்த விடயத்தில் தலையிட்டு மாதாந்தம் உரிய காலத்தில் கொடுப்பனவு வழங்குவதற்கான நிதியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment