(எம்.வை.எம்.சியாம்)
பலமான மாவர்த்தகர்கள் உரிய முறையில் வரிப் பணத்தை செலுத்தினால் மாத்திரமே அதன் பயனை முழு சமூகமும் அடைந்துகொள்ள முடியும் என தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.
ஆனால் கடந்த காலங்களில் அரசாங்கம் வரிப் பணத்தை உரிய முறையில் வசூலிக்க முடியாமையால் நாடு பாரதூரமான பிரச்சினைகளை எதிர்கொண்டது. இக்கட்டான சந்தர்ப்பங்களில் ஒரு வர்த்தகர் தனது சொந்த நிதியில் சமூக நலன் சார்ந்த பணிகளை மேற்கொள்ளும்போது அவ்வாறான வர்த்தகர்களைப் பாராட்ட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கம்பஹாவில் புதன்கிழமை (01) இடம்பெற்ற பாடசாலை மாணவர்கள் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் வயோதிபர்களுக்கான நலன்புரி கொடுப்பனவு வழங்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், பலமான வர்த்தகர்கள் முறையாக வரி செலுத்தினால் மாத்திரமே அரசாங்கம், சமூகம் மற்றும் பயனாளிகள் அதன் நன்மை அடைந்துகொள்ள முடியும். ஆனால் இந்த வரிப் பணத்தை உரிய முறையில் வசூலிக்க முடியாமல் கடந்த காலங்களில் நாடு மிக பாரதூரமான பிரச்சனைகளை எதிர்கொண்டது. எனினும் நாம் அதிலிருந்து படிப்பினை பெற்றுக் கொண்டுள்ளோம். அந்த தவறை நாம் இழக்கப் போவதில்லை.
எமது திறைசேரியில் நிதி பற்றாக்குறை உள்ளது. அதன் நிலைமை என்ன என்பது தொடர்பில் மக்கள் நன்கறிவார்கள். ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை சீருடை மற்றும் அப்பியாசப் புத்தகங்கள் கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பில் பாராளுமன்றத்தில் விடயங்களை முன்வைக்கும்போது அங்கு எதிர்க்கட்சியினர் அதை புறக்கணித்து வேறு விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாராளுமன்றத்திலும் குழப்ப நிலையை ஏற்படுத்தினர்.
ஆனால் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒழுக்கமாக செயற்படாவிட்டால் இந்த வருடமும் இந்த பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை சீருடைகள் மற்றும் அப்பியாசப் புத்தகங்களை பெற்றுக் கொடுக்க முடியாமல் போயிருக்கும்.
இவ்வாறான நிலையில் அரசாங்கம் மாணவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்க முயற்சிக்கும்போது பியகமவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் சமூகத் தேவைகளுக்காக தனது தனிப்பட்ட சொத்துக்களை தியாகம் செய்தமை பாராட்டப்பட வேண்டியதாகும் என மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment