செ.சுபதர்ஷனி
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் இயங்கி வந்த லீனியர் ஆக்சிலேட்டர் இயந்திரங்களில் ஒன்று செயலிழந்துள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத் தலைவர் சானக்க தர்ம விக்ரம தெரிவித்துள்ளார்.
இயந்திர செயலிழப்புத் தொடர்பில் வெள்ளிக்கிழமை (03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் அவசர கதிரியல் சிகிச்சைப் பிரிவில் உள்ள மூன்று லீனியர் ஆக்சிலேட்டர் இயந்திரங்கள் கடந்த மாதம் 31 ஆம் திகதி மின் வழங்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக செயலிழந்தன.
எனினும் மின்சார சபை ஊழியர்களின் உதவியுடன் மீள இயந்திரத்துக்கான மின்சாரத்தை வழங்கி, செயற்படுத்த முனைந்த நிலையில் இரு இந்திரங்ளை மீட்டெடுக்க முடிந்தது.
தற்போது மீள செயற்படும் இயந்திரங்களின் மூலம் வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளிகளுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனினும் ஒரு இயந்திரத்தை மீள செயல்படுத்த முடியாமல் போயுள்ளது.
மின் துன்டிக்கப்பட்டதை அடுத்து இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக குறித்த இயந்திரத்தை செயற்படுத்த முடியாமல் போயுள்ளதாக இயந்திரத்தை பழுதுப்பார்த்த ஒப்பந்தக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறெனினும் செயலிழந்துள்ள குறித்த இயந்திரத்தை பழுதுபார்க்கும் பணிகள் இன்று இரண்டாம் கட்டமாக முன்னெடுக்கப்பட உள்ளது. மேலும் நாளாந்தம் வைத்தியசாலைக்கு வருகை தரும் சுமார் 60 தொடக்கம் 70 வரையான நோயாளர்களுக்கு இவ்விந்திரத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment