இஸ்லாம் மதத்தை அவமதித்ததற்காக ஒன்பது மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த பிணை மனுவை கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன நிராகரித்துள்ளார்.
அந்த தண்டனைக்கு எதிராக தேரர் மேன்முறையீடு செய்துள்ளதால், மேன்முறையீட்டு மனு விசாரிக்கப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும் வரை ஞானசார தேரரை பிணையில் விடுவிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணிகள் இந்த பிணை கோரிக்கையை விடுத்திருந்தனர்.
இஸ்லாம் மதத்தை அவமதித்தமை தொடர்பான வழக்கில் ஞானசார தேரருக்கு நேற்றையதிளம் (09) ஒன்பது மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அதற்கு எதிராக தனது சட்டத்தரணிகள் ஊடாக கொழும்பு மேல் நீதிமன்றில் அவர் மேன்முறையீடொன்றை செய்திருந்த நிலையில், அது கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
தேரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி காமினி அல்விஸ், மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் தனது கட்சிக்காரருக்கு பிணை வழங்குமா இங்கு கோரிக்கை முன்வைத்தார்.
மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு கணிசமான கால அவகாசம் எடுக்கலாம் என வாதிட்ட சட்டத்தரணி, எனவே ஒன்பது மாத கால சிறைத் தண்டனை மாத்திரமே இருப்பதால் விசேட வழக்காக கருதி தேரரை பிணையில் விடுவிக்குமாறு கோரினார்.
இதற்கு பதிலளித்த நீதவான், இவ்வாறான பிணை விண்ணப்பத்தை பரிசீலிப்பதற்கு விசேட சூழ்நிலைகள் முன்வைக்கப்பட வேண்டுமெனவும், சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை மீளாய்வு செய்ததன் அடிப்படையில் பிரதிவாதி சார்பில் அது தொடர்பான எவ்வித காரணமும் இருப்பதாக தெரியவில்லை என்பதால், பிணை கோரிக்கையை நிராகரிப்பதாக நீதவான் அறிவித்தார்.
2016 ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் திகதியன்று கிருலப்பனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், “இஸ்லாம் ஒரு புற்றுநோய்.. அதை துடைத்தெறிய வேண்டும்” என்ற கருத்தினூடாக இன நல்லிணக்கத்தை மீறும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டுக்கமைய, தண்டனைக் கோவை சட்டத்தின் 291ஆவது பிரிவின் கீழ் ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸாரால் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அதற்கமைய, வழக்கு விசாரணையின் இறுதியில் இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 9 மாத சிறைத் தண்டனையுடன் ரூ. 1,500 அபராதத்தையும் விதித்து நேற்றையதினம் (09) தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment