ஜனாதிபதி அநுரகுமாரவின் அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான அதிகாரப் பகிர்வுக்குரிய சாத்திய நிலைமைகள் மறைந்து வருகின்றன என்று குறிப்பிட்டுள்ள கலாநிதி.தயான் ஜயத்திலக்க கடந்த காலத்தில் தமிழ் அரசியல்வாதிகள் செய்துள்ள பத்து பாவங்களையும் பட்டியலிட்டுச் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் சம்பந்தமாக தனது கருத்துக்களை வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைகளுக்கான தீர்வினைக் காண்பதற்கு 1987ஆம் ஆண்டு ஜுலை மாதம் 29ஆம் திகதி இந்திய, இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னணியில் உருவான 13ஆவது திருத்தச் சட்டத்தினை அடுத்து இரண்டு சந்தர்ப்பங்கள் காணப்பட்டன.
அச்சமயத்தில் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளில் சிலர் 13ஆவது திருத்தச் சட்டத்தினை கடுமையாக எதிர்த்தார்கள். சிலர் 13ஆவது திருத்தச் சட்டத்தினை உடன் அமுலாக்குவதற்கு முயற்சித்தார்கள். ஆனால் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளில் எவரும் அதனை முறைப்படியாக நடைமுறைப்படுத்தி பரிநாமரீதியான வளர்ச்சியை அடைந்து அதிகாரப் பகிர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சிக்கவில்லை.
இதன் காரணமாக, தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் பத்து பாவச் செயல்களை இழைத்துள்ளார்கள் என்பது எனது நிலைப்பாடாகிறது. அவர்கள் செய்துள்ள அந்தப் பத்து பாவச் செயல்களை நான் பட்டியலிடுகின்றேன்.
01. தமிழ் நாடு வழியாக டில்லிக்கு ஆணையிட முடியும் என்று கருதியமையாகும்.
02. புலம்பெயர்ந்துள்ள தமிழர்களுக்கு காணப்படும் மேற்கத்தேய ஆதரவானது டில்லியை விடவும் முக்கியமானது என்று கருதியமையாகும்.
03. தெற்கில் இந்திய எதிர்ப்பு மற்றும் அதிகாரப் பகிர்வு ஆகியவற்றுடன் ஜே.வி.பி மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த தருணத்தில், மாநில அதிகாரத்துக்கான அதிகாரப் பகிர்வு நூலில் தொங்கிக் கொண்டிருந்த தருணத்தில் 13ஆவது திருத்தச் சட்டத்தினை வரதராஜப் பெருமாள் தலைமையிலான மாகாண அரசு உடனடியாக அமுலாக்குவதற்கு முனைந்தமையாகும்.
04. இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக தனி நாடு கோரிப் போரிட்டு வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரிப்பதன் ஊடாக 13ஆவது திருத்தத்தைக் கடந்து அப்பால் செல்லதற்கு முயன்றமையாகும்.
05. தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கு சாதகமான மனோநிலையில் இருந்த இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் அந்த ஆதரவைப் பெறுவதற்கு முயன்றமையாகும்.
06. பிரபாகரன் மரணிக்கப்பட்டு விடுதலைப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படையாகவோ அல்லது தொடக்கப்புள்ளியாகவோ 13ஆவது திருத்தச் சட்டத்தினை நிராகரித்தமையாகும்.
07. உள்ளுர் மற்றும் வெளிநாடுகளில் இணைத் தலைவர்களாக நேர்வே மற்றும் தென்னாபிரிக்கா செயற்பட்ட காலத்தில் சந்திரிகா, ரணில் போன்றவர்கள் 13ஆவது திருத்தச் சட்டத்தினை விடுத்துச் செயற்படுவதற்கான அனைத்து சாத்தியமான வழிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தமையாகும்.
08. வடக்கு, கிழக்கு மாகாண சபைகளைப் பாதுகாப்பதற்கு பதிலாக சீனாவுக்கு எதிரானதொரு அரணாக அதனை காண்பித்துக் கொண்டிருக்கின்றமையாகும்.
09. டில்லியானது தனது பொருளாதார மற்றும் மூலோபயங்களை பாதுகாப்பதற்காக நகர்ந்தபோது 13ஆவது திருத்தச் சட்டத்தினை செயற்படுத்துவதில் தாமதமாக இந்தியாவின் உதவியை நாடும் போக்காகும்.
10. சமஷ்டி முறைமையைக் கோரிக் கொண்டு 13ஆவது திருத்தச் சட்டத்தினையும் டில்லியுடனான இணைப்பினை துண்டிக்கும் போக்கானது அதிகாரப் பகிர்வு மறைந்து போவதற்கு காரணமாகின்றது.
இவ்விதமான நிலைமையில், தற்போது 13ஆவது திருத்தச் சட்டம் அல்லது மாகாண ரீதியான அதிகாரப் பகிர்வுக்கு வாய் மொழி ரீதியான உறுதிமொழியைக் கூட வழங்காத தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியில் உள்ளது.
அதுமட்டுமன்றி குறித்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் வடக்கு தமிழர்கள் இல்லை, அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் காணப்படுகின்றது. அரசுக்கு தமிழ் தேசியம் சார்ந்த நாடுகளிடத்தில் நட்பற்ற நிலைமையும் காணப்படுகின்றது. இத்தகைய அரசாங்கமொன்றை கையாள வேண்டிய நிலைமையானது தற்போது தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி தமிழ்த் தேசியவாதத்தின் சுயாட்சி, அதியுச்ச அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட வலியுறுத்தல்களுக்கு அரசாங்கத்திடம் உரிய பதில்கள் மட்டுமல்ல அங்கீகாரம் கூட இல்லை.
மேலும் 1983ஆம் ஆண்டில் தோற்றம் பெற்ற இந்திய இலங்கை படைகளுக்கு எதிரான தமிழ் இளைஞர்களின் ஆயுதக் கிளர்ச்சியால் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் எதனையும் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கவில்லை.
ஒற்றையாட்சியை நிராகரித்ததன் காரணமாக, 13ஆவது திருத்தச் சட்டத்தினையும் ஏற்றுக் கொள்ள முடியாத நிலைமைகள் ஏற்பட்டதோடு சமஷ்டி நோக்கி செல்ல முடியாத நிலைமைகளும் ஏற்பட்டுள்ளதோடு, தற்போது ஒற்றையாட்சிக்குள் 13 ஐயும் இழந்துவிடும் நிலைமையே ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி ஒற்றையாட்சிக்கு வெளியில் அதிகாரப் பகிர்வினைப் பெறுவதற்கான சாத்தியப்பாடுகளும் காணப்படவில்லை.
சிரியாவின் அசாத்தும், சுயாட்சியைப் பெற்றுக் கொண்ட குர்து இனத்தவரும் வொஷிங்டன் அல்லது மொஸ்கோவை விடவும் தமது அபிலாஷைகளைப் பெற்றுக் கொள்வதற்கு அண்டை நாடான துருக்கி மிகவும் பொருத்தமானது என்பதையே புரிந்துகொண்டனர்.
வடக்கு தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளின் ஒத்துழையாமையானது இந்திய, இலங்கை உறவின் நிகழ்ச்சி நிரலில் இருந்து தமிழர்கள், அதிகாரப் பகிர்வு, 13ஆவது திருத்தச் சட்டம் ஆகிய விடயங்கள் நீக்கப்படுவதற்கு காரணமாகின்றது.
தற்போது தமிழ்த் தேசிய அரசியல்வதிகள் வரலாற்று ரீதியாக மிகவும் பலவீனமாக உள்ளநிலையில் 13ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரிப்பதும், டில்லியின் இணைப்பை துண்டிப்பதும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கான அதிகாரப் பகிர்வுக்கான வெளிப்புற செல்வாக்கை இழக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
No comments:
Post a Comment