விசேட குழுவொன்றை நியமித்து அறிக்கை அனுப்பி வைக்க அரசாங்கம் திட்டம் ! - News View

About Us

About Us

Breaking

Saturday, January 11, 2025

விசேட குழுவொன்றை நியமித்து அறிக்கை அனுப்பி வைக்க அரசாங்கம் திட்டம் !

(நா.தனுஜா)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கு முன்பதாக நல்லிணக்க செயன்முறை தொடர்பான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கென விசேட குழுவொன்றை நியமித்து, அதுபற்றி ஜெனீவாவுக்கு அறிக்கையொன்றை அனுப்பி வைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகி, ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத் தொடர் நடைபெற்ற வேளையிலேயே இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

அதனையடுத்து இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்” எனும் தலைப்பிலான தீர்மானம் வாக்கெடுப்பின்றி மேலும் ஒரு வருட காலத்துக்குக் கால நீடிப்பு செய்யப்பட்டது.

அவ்வாறு ஒரு வருடத்துக்கு கால நீடிப்பு செய்யப்பட்ட தீர்மானம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 கூட்டத் தொடருடன் முடிவுக்கு வருகிறது.

இந்நிலையில் அடுத்த கட்டமாக இத்தீர்மானம் மீண்டும் கால நீடிப்பு செய்யப்படுமா? அல்லது பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் இலங்கையில் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவது குறித்து புதியதொரு பிரேரணை முன்மொழியப்படுமா? இதனை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் எவ்வாறு கையாளப்போகிறது? எனும் கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத் தொடருக்கு முன்பதாக, தாம் முன்னெடுக்கவிருக்கும் நல்லிணக்க செயன்முறை தொடர்பான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கென அரசாங்கம் விசேட குழுவொன்றை நியமிக்கவிருப்பதாகவும், அக்குழுவினால் தயாரிக்கப்படும் வேலைத்திட்டத்தை உள்ளடக்கியதாக ஜெனீவாவுக்கு அறிக்கையொன்றை அனுப்பி வைப்பதற்கு உத்தேசித்திருப்பதாகவும் உள்ளக வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.

No comments:

Post a Comment