மலையக மக்களுக்கான மாடி வீட்டுத் திட்டம் தோட்டப் பகுதிகளிலேயே நிர்மாணிக்கப்படும் - அமைச்சர் சமந்த வித்யாரத்ன - News View

About Us

About Us

Breaking

Monday, January 27, 2025

மலையக மக்களுக்கான மாடி வீட்டுத் திட்டம் தோட்டப் பகுதிகளிலேயே நிர்மாணிக்கப்படும் - அமைச்சர் சமந்த வித்யாரத்ன

மலையகத் பெருந்தோட்ட மக்களுக்கான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அவர்களுக்கான மாடி வீட்டுத் திட்டத்தை தற்போது அவர்கள் வசிக்கும் தோட்டப் பகுதிகளிலேயே நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென, பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட மக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வீடமைப்பு திட்டங்களை மேம்படுத்துவது தொடர்பில், பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தப் பேச்சு வார்த்தையில் பெருந்தோட்டக் கைத்தொழில் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியத்தின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மலையக பிரதேசங்கள் பலவற்றில் மண் சரிவு அனர்த்தங்கள் இடம்பெறுவதாக, கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் அவ்வாறு மண் சரிவு இடம்பெறாத தோட்டக் காணிகள் இனங்காணப்பட்டு அங்கு மாடி வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வீடுகளை நிர்மாணிப்பதற்கும் குறைந்தளவு காணிகளே காணப்படுகின்றன. இதனால் மலையக பெருந்தோட்ட மக்களுக்கு குடியிருப்பு பிரச்சனைகளை நிவர்த்தி செய்யும் வகையில் மாடி வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், அவர்களது பிள்ளைகளுக்கான கல்வி வசதிகளும் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

No comments:

Post a Comment