ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் பெரும் அலையாக வடக்கு காசா நோக்கி பயணம் : இது பெரும் வெற்றி, ஆக்கிரமிப்பாளர்களின் திட்டத்தின் தோல்வி என்கிறது ஹமாஸ் - News View

About Us

About Us

Breaking

Monday, January 27, 2025

ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் பெரும் அலையாக வடக்கு காசா நோக்கி பயணம் : இது பெரும் வெற்றி, ஆக்கிரமிப்பாளர்களின் திட்டத்தின் தோல்வி என்கிறது ஹமாஸ்

பணயக் கைதிகளில் மேலும் மூவரை விடுவிப்பதில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து வடக்கு காசாவை நோக்கி ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் நேற்று பெரும் அலையாக பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.

அர்பல் யஹுத் என்ற இஸ்ரேலிய சிவில் பணயக் கைதியை விடுவிக்காததை அடுத்து இஸ்ரேல், பலஸ்தீனர்கள் வடக்கு காசாவுக்கு திரும்புவதை முடக்கியது. இதனால் பாதை திறக்கப்படும் வரை கடந்த இரு தினங்களாக பலஸ்தீனர்கள் வீதிகளில் காத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்றுக் காலை வடக்கு காசாவை ஏனைய பகுதிகளில் இருந்து துண்டிக்கும் வகையில் இஸ்ரேல் அமைப்பித்திருக்கும் நெட்சரிம் தாழ்வாரத்தை திறந்ததை அடுத்து பலஸ்தீனர்கள் வடக்கை நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர்.

நேற்றுக் காலை 7 மணி தொடக்கம் அல் ரஷீத் வீதியை கடந்து கால்நடையாக வடக்கு காசாவுக்கு திரும்புவதற்கும் காலை 9 மணி தொடக்கம் சலா அல்தீன் வீதி ஊடாக வாகனங்களில் அங்கு செல்வதற்கும் இஸ்ரேல் அனுமதி அளித்தது.

இதனையடுத்து மக்கள் தமது உடைமைகளை சுமந்தபடி வடக்கை நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர். வீதி நெடுகவும் பெரும் திரளான மக்கள் பயணிக்கும் காட்சிகளை தொலைக்காட்சிகள் வெளியிட்டன.

‘வீட்டுக்கு திரும்புவது, குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் இணைவது மற்றும் தொடர்ச்சியாக வாழ்ந்த வீட்டை பார்ப்பது பெரும் உணர்வுமிக்கதாக உள்ளது’ என்று இடம்யெர்ந்துள்ள இப்ராஹிம் அபூ ஹசரா ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

மக்கள் வடக்கு காசாவுக்கு திரும்புவது பெரும் வெற்றி என்று அறிவித்திருக்கும் ஹமாஸ், இது ஆக்கிரமிப்பாளர்களின் திட்டத்தின் தோல்வி என்று குறிப்பிட்டுள்ளது.

காசாவில் கடந்த 15 மாதங்களாக நீடித்த போரில் வடக்கு காசா மீது உக்கிர தாக்குதல்களை நடத்திய இஸ்ரேலியப் படை அந்தப் பகுதியை முற்றுகையில் வைத்திருந்தது. 

இதில் வடக்கு காசாவில் இருந்து இடம்பெயர்ந்த 650,000 பேர் வரை அங்கு திரும்புவதற்கு எதிர்பார்த்திருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக போரின் ஆரம்பத்தில் தரைவழி படை நடவடிக்கைக்காக வடக்கு காசாவில் இருந்து இஸ்ரேலியப் படை 1.1 மில்லியன் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி இருந்தது. 

காசாவில் இஸ்ரேல் இடைவிடாது நடத்திய தாக்குதல்களில் அந்தப் பகுதி வெறும் இடிபாடுகளாக மாறியிருப்பதோடு 47,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

கடந்த சனிக்கிழமை இஸ்ரேலிய இராணுவத்தைச் சேர்ந்த நான்கு பெண் பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தபோதும் அன்றைய தினத்தில் விடுவிப்பதாக எதிர்பார்க்கப்பட்ட சிவில் பணயக் கைதியான யஹுத் விடுவிக்கப்படாததை அடுத்தே பிரச்சினை ஏற்பட்டது. அவர் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை மத்தியஸ்தர்கள் ஊடாக ஹமாஸிடம் இஸ்ரேல் கோரியிருந்தது. 

இந்நிலையில் யஹுத் உட்பட மூன்று பணயக் கைதிகளை எதிர்வரும் வியாழக்கிழமை விடுவிப்பதற்கு உடன்பாடு எட்டப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் பின்னர் குறிப்பிட்டிருந்தது. இதனை ஹமாஸ் அமைப்பு நேற்று உறுதி செய்தது.

ஆறு வாரங்கள் கொண்ட காசா முதல் கட்ட போர் நிறுத்தத்தில் இஸ்ரேலிய சிறைகளில் இருந்து சுமார் 1,900 பலஸ்தீன கைதிகளுக்கு பகரமாக 33 பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் இணங்கியது. இதுவரை ஏழு பணயக் கைதிகளும் சுமார் 300 பலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை காசாவில் இருந்து பலஸ்தீனர்களை ஜோர்தான் மற்றும் எகிப்துக்கு வெளியேற்றி, அந்தப் பகுதியை சுத்தப்படுத்தி மீளக் குடியமர்த்தும் திட்டம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டதற்கு பிராந்திய தலைவர்கள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

ஆக்கிமிக்கப்பட்ட மேற்குக் கரையை தளமாகக் கொண்ட பலஸ்தீன அதிகார சபையின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் இந்தத் திட்டத்தை நிராகரித்ததோடு காசாவில் இருந்து பலஸ்தீனர்களை இடம்பெயரச் செய்யும் இவ்வாறான திட்டங்களை கண்டித்தார்.

ஹமாஸ் அரசியல் பிரிவு உறுப்பினரான பசம் நயீம் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு கூறும்போது, ‘பலஸ்தீனர்களை இடம்பெயரச் செய்து மாற்று தாயகங்களை அமைக்கும் இதேபோன்ற திட்டங்களுக்கு செய்தது போல் இந்த திட்டத்தையும் பலஸ்தீனர்கள் தோற்கடிப்பார்கள்’ என்றார். 

காசாவில் இருந்து பலஸ்தீனர்களை வெளியேற்றும் முயற்சிகள், 1948 இல் இஸ்ரேல் உருவாக்கத்தின்போது வெளியேறிய பலஸ்தீனர்களை நினைவூட்டுவதாக கருதப்படும். 

‘என்ன நடந்தாலும் நாம் பலஸ்தீனம் அல்லது காசாவில் இருந்து வெளியேற மாட்டோம் என்று டிரம்ப் மற்றும் ஒட்டு மொத்த உலகுக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்’ என்று இடம்பெயர்ந்துள்ள காசா குடியிருப்பாளரான ரஷாத் அல் நாஜி ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment