(இராஜதுரை ஹஷான்)
விடுதலைப் புலிகள் அமைப்புடன் ஒப்பந்தம் செய்திருந்தால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கும். சவால்களை கண்டு அச்சமடைவதாயின் விடுதலைப் புலிகளுடன் மோதியிருக்கமாட்டோம். இதன் தாக்கம் எமக்கும், எமது பிள்ளைகளுக்கும் செல்வாக்கு செலுத்தும் என்பதை நன்கு அறிவோம். அரசாங்கத்துடன் மோதுவதற்கு தயாராகவுள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (28) ' ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்ற ஒன்றியம்' கிளை அலுவலகம் திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, 2015 ஆம் ஆண்டு தேசிய மற்றும் சர்வதேச சூழ்ச்சியினால் தோற்கடிக்கப்பட்டோம். தோல்வியை கண்டு நாங்கள் ஒருபோதும் தளர்வடையவில்லை. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மீண்டும் எழுச்சி பெற்றோம்.
2019 ஆம் ஆண்டு கொவிட் பெருந்தொற்றுத் தாக்கம் மற்றும் பொருளாதார தாக்கம் உள்ளிட்ட காரணிகளால் மீண்டும் நெருக்கடிக்குள்ளானோம்.
69 இலட்சம் மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது நம்பிக்கை கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள். ஆகவே மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம்.
மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு அரசாங்கத்துக்கு நேரமில்லை. ஏனெனில் எவ்வாறு அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுக்கலாம் என்பதற்கு இரவு வேளைகளில் ஒன்றுகூடி பேச்சுவார்த்தையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் போட்டியிடுவோம். வேட்பு மனுத் தாக்கலுக்கான பணிகள் மற்றும் நேர்காணலை எதிர்வரும் வாரம் முதல் முன்னெடுப்போம். 2018 ஆம் ஆண்டைப் போன்று உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இருந்து எமது எழுச்சியை ஆரம்பிப்போம்.
அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல்களுக்கு அச்சமடைய வேண்டிய தேவை எமக்கு கிடையாது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாது என்று பல அரச தலைவர்கள் பின்வாங்கியபோது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்காக யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். ஏனைய அரச தலைவர்களைப் போன்று விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்திருந்தால் அவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கும்.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தால் ஏற்படும் எதிர்கால விளைவுகளை மஹிந்த ராஜபக்ஷ நன்கு அறிந்திருந்தார். அந்த சவால்களை நாங்களும் எதிர்கொண்டுள்ளோம். எமது பிள்ளைகளுக்கும் அதன் தாக்கம் செல்வாக்கு செலுத்தும்.
யுத்தம் முடிவடைந்தாலும் அதன் கொள்கை இன்றும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வியாபித்துள்ளது. இவ்வாறான நிலையில்தான் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்பட்டு அவர்களை அரச உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து வெளியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.
No comments:
Post a Comment