(எம்.மனோசித்ரா)
உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும். தேர்தல் முறைமையிலுள்ள சிக்கல் காரணமாகவே மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாதுள்ளது. இந்தப் பிரச்சினைக்கான தீர்வினைக் கண்டால் மாத்திரமே மாகாண சபைத் தேர்தல் சாத்தியமாகும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், முதலில் நீதிமன்ற தீர்ப்பிற்கமைய உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும். அதன் பின்னர் மாகாண சபைத் தேர்தல் குறித்து சிந்திக்கலாம். தேர்தல் முறைமையிலுள்ள சிக்கல் காரணமாகவே மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாதுள்ளது. அதனை விடுத்து வேறு எந்தக் காரணியுமல்ல.
எனவே மாகாண சபைத் தேர்தல் முறைமை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.
கடந்த அரசாங்கம் தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அதற்கமைய தேர்தலை நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்தவில்லை.
ஒன்றில் நூறு வீதம் விகிதாசார முறைமைக்குச் செல்ல வேண்டும். அவ்வாறில்லை என்றால், உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களைப் போன்று விகிதாசார கலப்பு முறையிலேயே மாகாண சபைத் தேர்தலையும் நடத்த வேண்டும்.
அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்தால் அதற்கு காலம் செல்லும். தற்போது மாகாண சபைத் தேர்தலை விட, உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலேயே கலந்தாலோசனைகள் இடம்பெற்று வருகின்றன.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் குறித்த நீதிமன்ற தீர்ப்பு சபாநாயகருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அது பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் திருத்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். அதற்கமைய தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளோம்.
தேர்தல் ஆணைக்குழு தேர்தலுக்கான தினத்தை அறிவிக்கும். ஏப்ரல் மாதத்துக்குள் தேர்தலை நடத்த முடியும் என்று நம்புகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment