'நிறைவேற்றதிகார ஜனாதிபதி' என்ற பதவிக்கு பொறுத்தமாக செயற்படுங்கள் : பூதங்களைப் போன்று பிடித்துக் கொண்டிருக்காமல் ஒழுக்கமாக வெளியேறுங்கள் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 29, 2025

'நிறைவேற்றதிகார ஜனாதிபதி' என்ற பதவிக்கு பொறுத்தமாக செயற்படுங்கள் : பூதங்களைப் போன்று பிடித்துக் கொண்டிருக்காமல் ஒழுக்கமாக வெளியேறுங்கள் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

(எம்.மனோசித்ரா)

ஹேமா பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒரு சட்டமும், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரிதொரு சட்டமும் இல்லை. கடிதம் மூலம் அறிவித்தால்தான் அரசாங்கத்துக்கு சொந்தமான இல்லங்களிலிருந்து வெளியேறுவதாக குறிப்பிடுவது அவர்கள் வகித்த 'நிறைவேற்றதிகார ஜனாதிபதி' என்ற பதவிக்கு பொறுத்தமானதல்ல என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், முன்னாள் ஜனாதிபதிகள் வசிக்கும் இல்லங்கள் தொடர்பில் அரசாங்கத்தால் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் வெறுமனே ஊடகப் பிரசாரத்துக்கானவை மாத்திரமல்ல. பல்வேறு தகவல்களை நாம் தற்போது முன்வைத்திருக்கின்றோம். அதற்கமைய அந்த இல்லங்களிலிருந்து வெளியேறுமாறு பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் பல சந்தர்ப்பங்களில் நாம் அறிவித்துவிட்டோம்.

இதற்கு முன்னர் இந்த இல்லத்தைப் பயன்படுத்திய முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஹேமா பிரேமதாச அதனை ஒப்படைத்துவிட்டுச் சென்றார். அதன் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷவும் அவ்வாறே செயற்பட்டிருந்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைப் பயன்படுத்தியிருக்கவில்லை. இவர்களும் முன்னாள் ஜனாதிபதிகளே. அவ்வாறிருக்கையில் அவர்களுக்கொரு சட்டம், இவர்களுக்கொரு சட்டம் இல்லை.

மைத்திரிபால சிறிசேனவின் இல்லம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பில் உத்தியோகபூர்வ இல்லம் என்றால் என்ன என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு அவர்கள் தீர்மானமொன்றை எடுக்க வேண்டும்.

2021 இல் அதிகாரம் கிடைத்த பின்னர் ஓய்வு பெற்றதன் பின்னர் வசிப்பதற்காகவென சுமார் 400 மில்லியன் ரூபாவுக்கும் அதிக அரச செலவில் குறித்த இல்லம் புனரமைக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் தற்போது இந்த இல்லத்தை நிர்வகித்துச் செல்வது அரசாங்கத்துக்கு பெரும் சுமையாகும். எனவே விரைவில் இந்த இல்லத்திலிருந்து மஹிந்த ராஜபக்ஷ வெளியேறுவார் என்று எதிர்பார்க்கின்றோம்.

கடிதம் அனுப்பினால்தான் வெளியேறுவோம் என்றும் சிலர் கூறிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் சாதாரண மக்கள் அல்ல. முன்னாள் ஜனாதிபதிகளாவர். எனவே இவர்கள் இவ்வாறு செயற்படுவது அவர்கள் வகித்த பதவிக்கு தகுதியானதல்ல.

எனவே பூதங்களைப் போன்று இல்லங்களைப் பிடித்துக் கொண்டிருக்காமல் ஒழுக்கமாக வெளியேறிவிட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment