(எம்.மனோசித்ரா)
இந்தியா எப்போதும் நிபந்தனையற்ற உறுதியான அண்டை நாடாகவும் இலங்கையின் அனைத்து முயற்சிகளிலும் உண்மையான நண்பனாகவும் இருக்கும். வரும் காலங்களில் எமது நாடுகளிடையேயான உறவுகள் மேலும் வலுப்பெறும் என்று உறுதியாக நம்புவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழையில் சனிக்கிழமை (18) நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான வரலாற்று பிணைப்புக்கள் ஆழமானவை மற்றும் நீடித்தவையாகும். இந்த உறவுகள் மொழி, இலக்கியம், மதம், கலை, கட்டடக் கலை மற்றும் சமையல் மரபுகள் என ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவி ஒன்றோடு ஒன்று இணைந்து ஒரு வளமான பிணைப்பை உருவாக்குகிறது.
இந்த ஆழமான பிணைப்புகள் தேவைப்படும் காலங்களில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய ஆழமான பிணைப்புக்கள் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. குறிப்பாக நெருக்கடியான தருணங்களில் இலங்கைக்கு இந்தியாவின் அசைக்க முடியாத ஒத்துழைப்பு இந்த ஒற்றுமைக்கு ஒரு சான்றாகும்.
இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு திட்டங்கள் மற்றும் வாழ்வாதார திட்டங்கள் போன்ற முன்முயற்சி திட்டங்கள் பாதிக்கப்பட்ட சமூகங்களை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் வகிக்கின்றன.
கொவிட் தொற்றின்போது இந்தியா உடனடி மருந்து மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கியது. அது மாத்திரமின்றி இலங்கையின் பொருளாதார மீட்சிக்காக முக்கியமான ஒத்துழைப்புக்களை வழங்கியிருக்கிறது. இந்த நல்லெண்ண செயற்பாடுகள் நமது நாடுகளிடையே நீடித்த கூட்டுறவையும் பரஸ்பர மரியாதையையும் எடுத்துக் காட்டுகின்றன.
மேலும் கலை, கலாசார மற்றும் மத பரிமாற்றங்களில் இந்தியா தொடர்ந்தும் வெற்றி பெற்று நம்மை ஒன்றிணைக்கும் பணிகளை மேலும் வலுப்படுத்துகிறது.
இந்தியா எப்போதும் நிபந்தனையற்ற உறுதியான அண்டை நாடாகவும் இலங்கையின் அனைத்து முயற்சிகளிலும் உண்மையான நண்பனாகவும் இருக்கும். வரும் காலங்களில் எமது நாடுகளிடையேயான உறவுகள் மேலும் வலுப்பெறும் என்று உறுதியாக நம்புகிறோம் என்றார்.
No comments:
Post a Comment