பிரபல்யத்துக்காக மக்களை அச்சமூட்டும் வகையில் செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் : சுகாதார அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 9, 2025

பிரபல்யத்துக்காக மக்களை அச்சமூட்டும் வகையில் செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் : சுகாதார அமைச்சர்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பிரபல்யத்துக்காக மக்களை அச்சமூட்டும் வகையில் செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இலங்கையில் (HMPV) வைரஸ் நோய் தொற்றாளர் எவரும் கண்டறியப்படவில்லை. இந்த வைரஸ் தொற்று தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற அமர்வில் வாய் மூல விடைக்கான வினாக்களின்போது ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நிசாந்த சமரவீர எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் பதிலளித்ததாவது, பொருளாதார பாதிப்பின் காரணமாக வைத்தியர்கள் மற்றும் சுகாதார சேவையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியதால் சுகாதாரத்துறை கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

இதற்கமைய 2022 -2024 வரையான காலப்பகுதியில் பெருமளவிலான விசேட வைத்தியர்கள், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட சுகாதார சேவையாளர்கள் சேவையில் இருந்து விலகியுள்ளார்கள், அல்லது நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.

நாட்டை விட்டு வெளியேறியுள்ள மற்றும் சேவையில் இருந்து விலகிய வைத்தியர்கள், சுகாதார சேவையாளர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் பரவும் (HMPV) வைரஸ் நோய் தொற்று தாக்கத்துடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒரு சில ஊடகங்கள் செய்தி வெளிட்டுள்ளன. இலங்கை மருத்துவ சபையில் நேற்று புதன்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேராசியர் நிலிகா மலவிகே ' கடந்த காலங்களில் இலங்கையில் இந்த வைரஸ் தொற்று அடையாளம்' காணப்பட்டிருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயத்தை ஒரு சிலர் முழுமையாக திரிபுபடுத்தி தற்போது அந்த நோய் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளனர்.

தமது பிரபல்யத்துக்காக மக்களை அச்சமூட்டும் வகையில் செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இந்த வைரஸ் தொற்று பரவல் தொடர்பில் நாட்டில் 20 பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நோய் அறிகுறியுடன் அடையாளம் காணப்பட்ட நபர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைக்கு அமைய அந்த நபர் (HMPV) வைரஸ் தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்று பரவல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். அவதானத்துடன் செயற்படுகிறோம். ஆகவே ஊடகங்கள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக மக்களை அச்சமூட்டும் வகையில் செயற்படுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment