அடுத்த வாரம் நிர்ணய விலை தீர்மானிக்கப்பட்டு நெல் கொள்வனவு செய்யப்படும் : பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க - News View

About Us

About Us

Breaking

Monday, January 27, 2025

அடுத்த வாரம் நிர்ணய விலை தீர்மானிக்கப்பட்டு நெல் கொள்வனவு செய்யப்படும் : பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க

அடுத்த வாரங்களில் நெல்லிற்கான நிர்ணய விலை தீர்மானிக்கப்பட்டு, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களினால் நெல் கொள்வனவு செய்யப்படும் என கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை (27) வவுனியாவில் ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பெரும்போக நெல் அறுவடை முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலே, விவசாயிகளிடம் இருந்து நெல்லினை கொள்வனவு செய்வதற்கான ஒழுங்குகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இருந்த போதும் இச்செயற்பாடானது துரிதமாக இடம்பெறவில்லை மற்றும் நெல்லிற்கான நிர்ணய விலை இல்லை என்ற ஆதங்கம் விவசாயிகளின் மத்தியில் இருக்கின்றது என்பதை நாங்கள் அறிகின்றோம்.

கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக அரசினால் நெல் கொள்வனவு செய்யப்படவில்லை. மேலும் மோசடி வியாபாரத்தின் மூலமாக சில வியாபாரிகளினால் அதிகளவான நெல் கொள்வனவு செய்யப்பட்டது.

குறிப்பாக நெல் களஞ்சியசாலைகள் பல உரிய பராமரிப்பின்றி கவனிப்பாரற்று காணப்படுவதனால் நெல்லினை கொள்வனவு செய்தாலும் சேமித்து வைக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

கிளீன் ஸ்ரீ லங்கா செயற்பாட்டின் ஊடாகவும் அரசாங்க அதிபர்கள் மற்றும் ஏனைய திணைக்களங்கள், இராணுவத்தினரின் உதவியின் ஊடாக கடந்த வாரத்திலே அவற்றினை புனரமைத்துள்ளோம்.

எதிர்வரும் வாரங்களில் நெல்லிற்கான நிர்ணய விலை தீர்மானிக்கப்பட்டு, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களினால் நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளமையால் விவசாயிகள் இதையிட்டு கவலையடையத் தேவையில்லை.

மேலும் அரசாங்கத்தினால் ஒரு நியாயபூர்வமாக விலை தீர்மானிக்கப்படுவதோடு பாரியளவில் நெல்லினை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment