(செ.சுபதர்ஷனி)
நாட்டின் அரசியல் அதிகார மாற்றத்துடன், சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் பலனற்றதாகியுள்ளன. ஆகையால் அவை தொடர்பில் கலந்துரையாட வாய்ப்பு வழங்குமாறு சுகாதார தொழிற்சங்கங்கள் கூட்டணி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் சுகாதார தொழிற்சங்க தலைவர்களுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், திங்கட்கிழமை (27) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு, சுகாதார தொழிற்சங்கங்கள் கூட்டணி வழங்கிய கடிதத்திலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சம்பள கொள்கையை மீறி அரசாங்கம் அவ்வப்போது மேற்கொள்ளும் சம்பள உயர்வுகள் காரணமாக, சுகாதார பணியாளர்களிடையே ஊதிய ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட கொள்கை கட்டமைப்பிற்குள் தேசிய சம்பளக் கொள்கையை உருவாக்குவதற்கான ஒப்பந்தங்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் அந்த ஒப்பந்தங்கள் குறிப்பிடப்படும் கொள்கையில் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது தொடர்பில் முறையான அறிவித்தல்கள் ஏதும் வழங்கப்படவில்லை.
புதிய அரசாங்கத்தின் கீழ் எதிர்கால சம்பள உயர்வுகள் அரசியல் அதிகாரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுமாயின் அது பெரும் ஆபத்தை விளைவிக்கும். சுகாதார ஊழியர்களின் கொடுப்பனவு முரண்பாட்டை சீர் செய்வதற்கு முன்மொழியப்பட்ட தொழில்நுட்ப அறிக்கையின் ஒரு பகுதி கடந்த அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதியை அடுத்த வரவு செலவு திட்டத்தின்போது வழங்குவது தொடர்பில் கடந்த அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது.
எனினும் புதிய வரவு செலவுத் திட்டத்துக்கமைய கொடுப்பனவு முரண்பாட்டை நீக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சியில் பெரும்பாலான சுகாதாரப் பணியாளர்கள் பாதிக்கப்படலாம். அரசாங்க ஊழியர்களுக்கான ஓய்வூதிய வயதெல்லை அனைவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும். எனினும் கடந்த அரசாங்கம் தற்காலிகமாக முன்மொழிந்திருந்த இரட்டை ஓய்வூதிய வயதுக் கொள்கையை தற்போதைய அரசாங்கமும் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் பெரும்பாலான சுகாதார ஊழியர்களுக்கிடையில் ஓய்வூதிய வயதில் கடுமையான ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது.
மேலும், சுகாதார அமைச்சு, அரசாங்கத்துடன் நேரடி அரசியல் உறவுகளைக் கொண்ட தொழிற்சங்கங்களுக்கு மாத்திரம் கலந்துரையாடல்களுக்கு அழைப்பு விடுக்கும் கொள்கையைப் பின்பற்றுவதால் மேற்படி விடயம் தொடர்பில் உரிய தகவல்களை வழங்க முடியாதுள்ளது.
ஆகையால் இது குறித்து கருத்தில் கொண்டு சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட உடனடியாக வாய்ப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கிறோம்.
No comments:
Post a Comment