மியன்மார் பிரஜைகள் அகதிகளா என்பதை உறுதிப்படுத்திய பின்னரே சர்வதேச சட்டத்துக்கமைய செயற்பட முடியும் : ரவூப் ஹக்கீமுக்கு பதிலளித்த ஆனந்த விஜேபால - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 8, 2025

மியன்மார் பிரஜைகள் அகதிகளா என்பதை உறுதிப்படுத்திய பின்னரே சர்வதேச சட்டத்துக்கமைய செயற்பட முடியும் : ரவூப் ஹக்கீமுக்கு பதிலளித்த ஆனந்த விஜேபால

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

புலனாய்வுத் தகவல்களுக்கு அமைய எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு ஒரு இலட்சம் அளவிலான அகதிகள் சட்டவிரோதமான முறையில் வருகை தருவதற்கான சாத்தியம் காணப்படுகிறது. நாட்டுக்கு வருகை தந்துள்ள 116 மியன்மார் பிரஜைகள் உண்மையில் அகதிகளாக வருகை தந்துள்ளார்களா என்பதை உறுதிப்படுத்தியதன் பின்னரே சர்வதேச சட்டத்துக்கு அமைய செயற்பட முடியும் என பொதுமக்கள் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளைகள், கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் உள்ளிட்ட பல ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், இலங்கைக்கு அகதிகளாக வருகை தந்துள்ள மியன்மார் ரோஹியங்கா முஸ்லிம் சமூகத்தினர் தொடரிபில் மனிதாபிமான அடிப்படையிலும், சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் ஏற்றுக் கொண்ட பிரகடனங்கள் ஆகியவற்றுக்கு அமைய செயற்படுங்கள் என்று வலியுறுத்தி, இந்த அகதிகள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கேள்வியெழுப்பினார்.

இதற்கு எழுந்து பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, மியன்மார் நாட்டில் இருந்து 116 பேர் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் படகு ஊடாக வருகை தந்துள்ளனர்.

இவர்களிடம் பொலிஸார் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் அந்த அகதிகள் மியன்மார் நாட்டு நாணய அலகில் 500 இலட்சத்தை ஆட்கடத்தல் நபர்களுக்கு கொடுத்துள்ளதாகவும், அத்துடன் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்திய தரப்பினருக்கு மியன்மார் நாணய அலகில் 800 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம்.

மியன்மார் அகதிகள் உண்மையில் அகதிகளாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டால் சர்வதேச சட்டத்துக்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம். இருப்பினும் தற்போது மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக உரிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் புலனாய்வு தகவல்களுக்கு அமைய எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு ஒரு இலட்சம் அளவிலான அகதிகள் சட்டவிரோதமான முறையில் வருகை தருவதற்கான சாத்தியம் காணப்படுகிறது.

ஆகவே இவ்விடயத்தை அலட்சியப்படுத்த முடியாது. ஆகவே முறையான விசாரணைகளின் பின்னரே சர்வதேச சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மீண்டும் எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், அகதிகளாக செல்பவர்களை எவரும் இலவசமாக அழைத்துச் செல்வதில்லை. மியன்மார் நாட்டின் நிலைமையை முழு உலகும் அறியும். இலங்கைக்கு வருகை தந்துள்ளவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள், பெண்கள், ஆகவே மனிதாபிமானத்துடன் சர்வதேச சட்டத்துக்கு அமைய செயற்படுங்கள். அகதிகளாக வருகை தந்துள்ளவர்களை மீண்டும் மியன்மார் நாட்டுக்கு அனுப்பி வைப்பது பாரியதொரு அநீதியாகும். அவர்களை பிறிதொரு நாட்டுக்கு பாதுகாப்பான முறையில் அனுப்பி வையுங்கள் கடந்த காலங்களிலும் அவ்வாறு இலங்கையில் இடம்பெற்றுள்ளது என்றார்.

மீண்டும் எழுந்து உரையாற்றிய அமைச்சர் ஆனந்த விஜேபால, மியன்மார் அகதிகளை அந்த நாட்டுக்கே அனுப்பி வைக்க பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. இவ்விடயம் குறித்து மியன்மார் அரசாங்கத்துடன் கருத்துக்களை மாத்திரமே பகிர்ந்து கொண்டுள்ளோம். விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டே செயற்பட முடியும் என்றார்.

No comments:

Post a Comment