வடக்கு மாகாணத்துக்கான புகையிரத சேவையை விரிவுபடுத்த போக்குவரத்து அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 8, 2025

வடக்கு மாகாணத்துக்கான புகையிரத சேவையை விரிவுபடுத்த போக்குவரத்து அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வடக்கு மாகாணத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள புகையிரத சேவையை விரிவுபடுத்த போக்குவரத்து அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும். தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி புகையிரத நிலையங்களில் வடக்கு மாகாணத்துக்கான புகையிரதங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளைகள், கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் உட்பட பல ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, மருந்து விநியோக சேவைகளுக்கான நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பதாரிகள் அழைக்கப்பட்டு, தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர்ப்பட்டியல் இருக்கின்றபோதும் இதுவரையில் நியமனங்கள் வழங்கப்படவில்லை.

வடக்கு மாகாணத்தில் இந்த பதவிக்கு 40 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. ஆனால் பிற மாவட்டங்களைச் சேர்ந்தோர் அழைக்கப்படுகின்றனர். நியமனம் வழங்கப்படாத காரணத்தால் சுகாதார சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு - யாழ் புகையிரத சேவை விடயம் தொடர்பிலும் சுட்டிக்காட்ட எதிர்பார்க்கின்றேன். இந்திய நிதி திட்டத்தின் கீழ் வடக்கு புகையிரத பாதை புனரமைக்கப்படுகிறது.

தினசரி கொழும்பு - யாழ். இடையே நான்கு புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அநுராதபுரம் முதல் வவுனியா வரையிலான புகையிரத பாதை புனரமைப்பு பணி காரணமாக அந்த புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன.

அந்த நான்கு சேவைகளில் இரண்டு சேவைகள் கிழக்கு மாகாணத்திற்கு முன்னெடுக்கப்பட்டபோதும் யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் கொண்டுவரப்படவில்லை.

தற்போது யாழ்ப்பாணத்திற்கு ஒரு புகையிரத சேவையே உள்ளது. அத்துடன் அதிவேக புகையிரத சேவை சனி மற்றும் ஞாயிறு தினங்களில் முன்னெடுக்கப்படுகிறது.

இது எமக்கு போதுமானது அல்ல. நான்கு சேவைகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இரண்டு சேவைகளே தற்போது முன்னெடுக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் புகையிரத திணைக்களமும், போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேவேளை யாழ்ப்பாண புகையிரத சேவை கொழும்பு வரையிலேயே முன்னெடுக்கப்படுகிறது. கல்கிசை வரையில் நடத்தப்பட வேண்டும் என்பதுடன் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி ரயில் நிலையங்களில் நிறுத்தக் கூடியவாறும் சேவைகள் நடத்தப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்கின்றேன் என்றார்.

No comments:

Post a Comment