(இராஜதுரை ஹஷான்)
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் என்.பி.எம். ரணதுங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அவரது பதவி விலகல் கடிதம் இன்று விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
3 மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்த என்.பி.எம். ரணதுங்க தனது பதவி விலகலுக்கான காரணங்களை விளக்கி நீண்ட கடிதம் ஒன்றை வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனிப்பட்ட காரணங்களினால் தான் பதவி விலகுவதாக நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக்கவுக்கு அறிவித்துள்ளார்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக ரணதுங்க 2024.10.10 அன்று நியமிக்கப்பட்டார்.
கடந்த புதன்கிழமை (29) இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன பதவி விலகினார். தனிப்பட்ட காரணிகளால் அவர் பதவி விலகியதாக அமைச்சரவையின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இலங்கை போக்குவரத்து சபையின் தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி அப்போதைய போக்குவரத்து அமைச்சர் விஜித்த ஹேரத்தினால் ரமல் சிறிவர்தன போக்குவரத்து சபையின் தலைவராக நான்காவது தடவையாகவும் நியமிக்கப்பட்டார்.
இவர் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (1994-2001), மஹிந்த ராஜபக்ஷ (2006-2007), மைத்திரிபால சிறிசேன (2015-2019) ஆகியோரின் காலத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவராக பதவி வகித்தார்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியில் இருந்து கலாநிதி செனேஷ் பண்டார விலகியுள்ளார்.
No comments:
Post a Comment