(எம்.வை.எம்.சியாம்)
கடந்த வருடத்தில் செயற்பட்டதை விடவும் இந்த வருடம் அதிக வினைத்திறனுடன் செயல்பட நாம் எதிர்பார்த்துள்ளோம். அதேபோன்று கடந்த காலங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச் செயல்கள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும். இந்த விசாரணைகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தவறான முறையிலோ அல்லது அரசியல் பழிவாங்களை மேற்கொள்ளும் நோக்கிலோ இடம்பெறாது என பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் பொலிஸ் பிரிவுகளில் இயங்கும் பொலிஸ் பிராஜ குழுக்களுக்கு கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தும் நிகழ்வில் அண்மையில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டு செயற்பட்டதை விடவும் 2025 ஆம் ஆண்டு அதிக வினைத்திறனுடன் செயற்பட நாம் எதிர்பார்த்துள்ளோம். அது தொடர்பில் உரிய ஆலோசனைகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று குற்றச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தகவல்களை நாம் சேகரித்துள்ளோம். அது தொடர்பிலான சிவப்பு மற்றும் நீல அறிக்கை கிடைத்துள்ளன.
சில குற்றவாளிகள் தொடர்பிலான சிவப்பு அறிக்கைகள் அண்மையில் எமக்கு கிடைக்கப் பெற்றன.
எதிர்காலத்தில் பாதாளாக உலகக் குழுவுடன் தொடர்பிலான முதன்மையான மற்றும் இரண்டாவது தொடர்புகள், அதனுடன் தொடர்புடைய வலையமைப்புக்கள் மற்றும் போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. இவை தொடர்பிலான முழுமையான தகவவல்களை ஊடகங்களுக்கு அறிவிக்க முடியாது. சட்டத்தின் பிரகாரம் தேவையான நடவடிக்கைகளை நாம் முன்னெடுப்போம்.
கடந்த காலங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச் செயல்கள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று பொதுமக்களின் நிதியை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் ஓரங்கமாக முன்னாள் ஜனாதிபதியின் மகன் ஒருவர் அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்தார். அது தொடர்பான விசாரணைகளை விரைவாக நாம் முன்னெடுத்துள்ளோம்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தவறான முறையில் அல்லது அரசியல் பழிவாங்கலை மேற்கொள்ளவோ எமக்கு ஆலோசனை வழங்கப்படவில்லை. எனக்கு கீழ் உள்ள அதிகாரிகளுக்கும் அவ்வாறான பணிப்புரைகள் விடுக்கப்படமாட்டாது என்றார்.
No comments:
Post a Comment