வரலாறு பூராகவும் இருந்த அரச தலைவர்களில் அதிகமானவர்கள் அகால மரணமடைந்துள்ளனர் : அரசாங்கம் மிகவும் அவதானமாக சிந்தித்து செயற்பட வேண்டும் என்கிறார் வஜிர அபேவர்த்தன - News View

About Us

About Us

Breaking

Friday, January 31, 2025

வரலாறு பூராகவும் இருந்த அரச தலைவர்களில் அதிகமானவர்கள் அகால மரணமடைந்துள்ளனர் : அரசாங்கம் மிகவும் அவதானமாக சிந்தித்து செயற்பட வேண்டும் என்கிறார் வஜிர அபேவர்த்தன

(எம்.ஆர்.எம்.வசீம்)

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும்போது அரசாங்கம் மிகவும் அவதானமாக சிந்தித்து செயற்பட வேண்டும். வரலாறு பூராகவும் இருந்த அரச தலைவர்களில் அதிகமானவர்கள் அகால மரணமடைந்துள்ளனர். அதனாலே பிரபுக்கள் பாதுகாப்பை, பாதுகாப்பு அமைச்சுக்கு அரசியலமைப்பின் ஊடக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

காலி மாவட்டத்தில் கரந்தெனிய தொகுதியில் வியாழக்கிழமை (30) இடம்பெற்ற அரசியல் சபை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரபுக்களின் பாதுகாப்பு தொடர்பில் பலரும் கதைத்து வருகின்றனர். அரசங்கம் அவர்களின் பாதுகாப்பை குறைத்து வருவது தொடர்பாகவும் பலரும் கதைத்து வருகின்றனர். 

எவ்வாறு இருந்தாலும் இவ்வாறான தீர்மானங்களை எடுக்கும்போது அரசாங்கம் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். 

குறிப்பாக மஹிந்த ராபக்ஷ இந்த நாட்டில் 30 வருடமாக இருந்து வந்த பங்கரவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இறுதியாக தலைமைத்துவம் வங்கிய ஒருவர்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு தனிமையில் யாழ்ப்பாணத்துக்கு சென்று வர முடியுமா? இந்தியாவின் புத்தகயாவுக்கு சென்று வர முடியுமா?. 

அவரை வெறுக்கக்கூடிய நபர்கள் இன்னும் இருக்கலாம். அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கலாம். அதனால் இவ்வாறான தீர்மானங்களை எடுக்கும்போது அரசாங்கம் இதனைவிட புத்திசாதூரியமாக சிந்தித்து செயற்பட வேண்டும்.

எமது நாட்டின் அரச தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என நூற்றுக்கும் அதிகமானவர்கள் அகால மரணமடைந்துள்ளனர். 

சந்திரிக்கா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜாபக்ஷ், கோத்தாபய ராஜபக்ஷ் போன்றவர்கள் மயிரிலையில் உயிர் தப்பி இருக்கி்ன்றனர். ஜே.ஆர். ஜயவர்த்தனவை பாராளுமன்றத்தில் குண்டு வீசி கொள்ள முயற்சித்தனர்.

2001 ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது வீடமைப்பு அமைச்சராக நானே இருந்தேன். அப்பாேது கடந்த அரசாங்கத்தில் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வீடுகளை மீள ஒப்படைக்குமாறு நான் அறிவித்திருந்தேன்.

அபோது லக்ஷ்மன் கதிர்காமரின் வீட்டையும் மீள ஒப்படைக்குமாறு தெரிவித்திருந்தேன்.  இதன்போது அன்று பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க, கதிர்காமருக்கு வழங்கப்பட்டிருந்த வீட்டை தொடர்ந்து அவருக்கு வழங்குமாறும் தெரிவித்தார்.

அப்போது அவர் சாதாரண பாராளுமன்ற உறுப்பினராகவே இருந்தார். அது மாத்திரமல்லாது, அவரின் பாதுகாப்புக்கு 140 பாதுகாவலர்கள் மற்றும் குண்டு துளைக்காத வாகனம் ஒன்றையும் ரணில் விக்ரமசிங்க வழங்கியிருந்தார்.

ஆனால் 2004 ஆம் ஆண்டு எமக்கு ஆட்சி அதிகாரம் இல்லாமல்போனது. அந்த காலப்பகுதியில் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டார். இதுதான் வரலாறு. 

அதனால் அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் அவதானமாக செயற்பட வேண்டும்.

அதனால் அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷ்வின் பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ் நாட்டு மக்கள் அனைவரும் எங்கு வேண்டுமானாலும் பாதுகாப்பாக சென்றுவர வழி ஏற்படுத்திக் கொடுத்த ஒரு தலைவர். அதனால் ஒரு சில விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும். 

எமது தலைவர்கள் எமது நிலைப்பாட்டுக்கு இனங்கினாலும் இல்லாவிட்டாலும் அவர்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் கட்டுப்பட்டுள்ளது. அதனாலே பிரபுக்களின் பாதுகாப்பை, பாதுகாப்பு அமைச்சுக்கு அரசியலமைப்பின் ஊடக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment