(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
தேயிலைத்துறை வருமானம் வீழ்ச்சியடைவதற்கு கடந்த அரசாங்கங்கள் மேற்கொண்ட தவறான தீர்மானங்களே காரணமாகும். அதனால் தேயிலைத் தோட்டங்களை முன்னேற்றும் வேலைத்திட்டங்களுக்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் கணிசமான நிதியை ஒதுக்கத் தீர்மானித்துள்ளது என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது லால் பிரேமநாத் எம்.பி எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேயிலைத்துறை உள்ளிட்ட பயிர்ச் செய்கை துறைகளுக்கு தேவைப்படும் உரத்தை பெற்றுக் கொடுப்பதற்காக ரஷ்யாவிடமிருந்து 55 ஆயிரம் மெற்றிக் தொன் உரத்தை நாம் பெற்றுக் கொண்டோம்.
அதேநேரம் அரசாங்கம் நிதி அமைச்சுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத்துறை மற்றும் சிறு தேயிலைத் தோட்ட முன்னேற்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்க தீர்மானித்துள்ளது.
தேயிலை பயிர்ச் செய்கைத்துறை நாட்டுக்கு பாரிய வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் ஒரு துறையாகும். இதில் நூற்றுக்கு 75 வீதமான தேயிலையை சிறு தேயிலை தோட்டப் பயிர்ச் செய்கையாளர்களே வழங்குகின்றனர். அந்த வகையில் அவர்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டிய தேவை உள்ளது.
சில இடங்களில் அந்த நடவடிக்கைகள் காலாவதியாகி மீள் நடுகை திட்டங்களை மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை உள்ளது.
ஒரு ஏக்கரில் மீள் பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்கு 9 இலட்சம் ரூபா தேவைப்படுகிறது. அந்த வகையில் இந்த முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒரு பகுதியினருக்கு அதற்கான ஒத்துழைப்புகளை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பொருளாதார பிரச்சினைகள் காணப்பட்டாலும் தேயிலைத் துறையை முன்னேற்றுவதற்கான வேலைத்திட்டங்களின் அவசியம் இனங்காணப்பட்டுள்ளது.
நேற்றையதினமும் நாட்டிலுள்ள 21 தேயிலைத் தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் பாரிய தேயிலைத் தோட்டங்கள் தொடர்பில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது.
கடந்த காலங்களில் தேயிலைத் தோட்டங்களின் அறுவடை மிகவும் குறைந்து காணப்பட்டது. கடந்த அரசாங்கங்கள் மேற்கொண்ட தீர்மானங்களே அதற்கான காரணங்களாகும். இதனால் தேயிலைத்துறை பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளது.
தேயிலைத் தோட்டங்களுக்கு உரம் வழங்குவதில் சில சிக்கல்கள் காணப்பட்டன. எனினும் உர கூட்டுத்தாபனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.
அரசாங்கத்தின் முயற்சியால் ரஷ்யாவிடமிருந்து 55 ஆயிரம் மெற்றிக் தொன் உரத்தை நாம் பெற்றுக் கொண்டோம். அதற்காக அந்த நாட்டு அரசாங்கத்திற்கு நாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment