தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பார்வையிட அனுமதி : உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு - சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, January 13, 2025

தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பார்வையிட அனுமதி : உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு - சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவிப்பு

(செ.சுபதர்ஷனி)

தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறைக் கைதிகளை காண உறவினர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளரும், ஊடகப் பேச்சாளருமான காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாளை செவ்வாய்க்கிழமை (14) கொண்டாடப்படும் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மேற்படி கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட உள்ளது.

கைதிகளை பார்வையிட வரும் உறவினர்கள் உணவு, இனிப்பு மற்றும் சுகாதார பொருட்கள் ஆகியவற்றை ஒருவருக்கு தகுந்த அளவில் மாத்திரம் கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து சிறைச்சாலைகளிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகாதார விதி முறைகளுக்கமைய கைதிகளை காண்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்றார்.

இதேவேளை, மாத்தறை சிறைச்சாலை வளாகத்தில் அரச மரக்கிளை முறிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய உயிரிழந்த கைதி ஒருவருக்கு தலா இரண்டரை இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கி வைக்கப்பட உள்ளது.

மேற்படி சம்பவத்தில் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஏனைய சிறைக் கைதிகள் அனைவரும் சிகிச்சைகளை பெற்றுக் கொண்டதன் பின்னர் மீள சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஜனவரி முதலாம் திகதி அன்று அரச மரக்கிளை சிறைச்சாலைக் கட்டிடத் தொகுதியில் முறிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்திருந்ததுடன் 9 சிறைக் கைதிகள் காயமடைந்திருந்தனர்.

மேலும் சம்பவத்தில் இரு சிறைச்சாலைக் கட்டிடங்களின் கூரைகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது ஒரு கட்டிடத்தின் மீளமைப்பு பணிகள் இறுதி தருவாயை எட்டியுள்ளது என்றார்.

No comments:

Post a Comment