(செ.சுபதர்ஷனி)
கடந்த வருடம் பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளர்களில் சுமார் 6,700 பேர் விசர் நாய் கடிக்கு ஆளானவர்கள் என அவசர சிகிச்சைப் பிரிவின் தலைவரும், அரச வைத்தியர் சங்கத்தின் உதவிச் செயலாளரும், ஊடக குழு உறுப்பினருமான வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிடுகையில், கடந்த வருடம் பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் மாத்திரம் 42,700 நோயாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6,700 பேர் விசர் நாய் கடி நோய்க்கு ஆளாகியவர்கள் என வைத்தியசாலை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
அவ்வாறு விசர் நாய் கடி நோய்க்கு ஆளாகிய 6,700 நோயாளர்களில் சுமார் 95 சதவீதமானோர் தாம் வாழும் வீட்டை அண்டிய பகுதிகளில் ஏற்பட்ட விபத்து காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வளர்ப்பு பிராணிகள் மூலம் விசர் நாய் கடி நோய்க்கு ஆளாகுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது.
மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் ஐவரில் ஒருவர் விசர் நாய் கடி நோயாளராவார். ஆகையால் வளர்ப்பு நாய்கள் மற்றும் உரிமையாளர்கள் இல்லாத வீதியில் நடமாடும் நாய்களுக்கு ஊசி வழங்குவதை உள்ளூராட்சி அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்.
அத்தோடு வீட்டில் வளர்ப்பு பிராணிகளை வைத்திருப்பவர்கள் அவற்றுக்கு உரிய ஊசிகளை வழங்கி அதற்கான அட்டைகளை பாதுகாப்பாக வைத்திருப்பதும் அவசியம் என்றார்.
No comments:
Post a Comment