இலங்கைத் தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினை விவகாரத்தினை பாரதப் பாராளுமன்றத்திற்கு முன்னகர்த்தி அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கனிமொழி தலைமையில் விரைவில் தி.மு.க.வின் பாராளுமன்ற உறுப்பினர்களையும், வெவ்வேறு மாநிலங்களின் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்திப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மற்றும் அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோருக்கும் தி.மு.க.பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கும் இடையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலையில் பிரத்தியேக சந்திப்பொன்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் கனிமொழிக்கும் எமக்கும் இடையில் சுமார் ஒன்றரை மணி நேரமாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.
இதன்போது தமிழர்களின் பிரச்சினைகளை பாரதப் பாராளுமன்றத்திற்கு எடுத்துச் செல்வதன் ஊடாக மத்திய அரசாங்கத்திற்கு எவ்வாறு அழுத்தங்களை பிரயோகிக்க முடியும் என்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அதனடிப்படையில் முதற்கட்டமாக தி.மு.க.வின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் நீண்ட காலமாக தீர்க்கப்படாதுள்ள தேசியப் பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக உரையாடுவதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து எடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டது.
அத்துடன், அடுத்த கட்டமாக வெவ்வேறு மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுடன் தமிழர்களின் விடயம் சம்பந்தமாக பேச்சுக்களை முன்னெடுத்து அவர்களின் ஒத்துழைப்புக்களையும் பெற்றுக் கொள்வதற்குரிய நடவடிக்கைகளையும் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதன் ஊடாக, பாராதப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் மத்திய அரசாங்கத்திற்கு கணிசமானதும், காத்திரமானதுமான அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேநேரம், புதிய அரசாங்கத்தின் வாக்குறுதிகள் மற்றும் செயற்பாடுகள் பற்றியும் கனிமொழியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment