திடீர் தீர்மானங்களால் எந்தவொரு சாதகமான மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது : வருமான வரி, சுங்கத் திணைக்களங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் - ஜயசேகர எம்.பி - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 14, 2025

திடீர் தீர்மானங்களால் எந்தவொரு சாதகமான மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது : வருமான வரி, சுங்கத் திணைக்களங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் - ஜயசேகர எம்.பி

(எம்.மனோசித்ரா)

பேரூந்து மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு குறிப்பிட்டவொரு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். அந்த கால அவகாசத்துக்குள் அவர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை அவர்களுக்கு தெளிவூட்ட வேண்டும். அதனை விடுத்து திடீர் தீர்மானங்களால் எந்தவொரு சாதகமான மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

குருணாகலில் திங்கட்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் சிறந்ததாகும். ஆனால் பேரூந்து மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு சிறிது கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

குறிப்பிட்டவொரு கால அவகாசத்தை அவர்களுக்கு வழங்கி இந்த காலப்பகுதிக்குள் அவர்கள் எவ்வாறானவற்றை செய்ய வேண்டும், எவற்றை தவிர்க்க வேண்டும் என்பது தொடர்பில் தெளிவூட்ட வேண்டும்.

இதுவரை காலமும் அவர்கள் போக்குவரத்து அதிகார சபையின் வர்த்தமானி அறிவித்தலுக்கமையவே செயற்பட்டு வந்தனர். தற்போது திடீரென அவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தும்போது அவர்களுக்கு அது அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடும்.

அதேபோன்று வருமான வரித் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களத்திலும் தற்போது காணப்படும் முறைமையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

அவசரமாக நடைமுறைப்படுத்தும் எந்தவொரு தீர்மானத்தின் ஊடாகவும் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது.

தற்போது சுங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றினால் பரிசீலனை செய்யப்படும் கொள்கலன் மீண்டும் பிரிதொரு குழுவால் பரிசீலிக்கப்படுகிறது.

இதன்போது முந்தைய குழுவின் பரிசீலனையில் ஏதேனும் தவறுகள் இடம்பெற்றிருந்தால் அவர்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கின்றனர்.

உண்மையில் செய்ய வேண்டியது இதுவல்ல. பரிசீலனை செய்யும் செயன்முறைகளை நவீனமயப்படுத்த வேண்டும். உலகில் இதற்காக பல நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

அதனை விடுத்து பழைய அதிகாரிகளை பழிவாங்கும் செயற்பாடுகளை மாத்திரம் முன்னெடுத்துக் கொண்டிருப்பதில் பிரயோசனம் இல்லை என்றார்.

No comments:

Post a Comment