எவ்வாறு நிர்வகிப்பது என்பதில் அரசாங்கம் தடுமாற்றமடைந்துள்ளது, தெரிந்தவர்களிடம் ஆலோசனை பெறவும் : மக்களை திருப்திப்படுத்த எடுக்கும் தவறான தீர்மானங்களின் பிரதிபலனை இறுதியில் மக்களே அனுபவிக்க நேரிடும் - கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 14, 2025

எவ்வாறு நிர்வகிப்பது என்பதில் அரசாங்கம் தடுமாற்றமடைந்துள்ளது, தெரிந்தவர்களிடம் ஆலோசனை பெறவும் : மக்களை திருப்திப்படுத்த எடுக்கும் தவறான தீர்மானங்களின் பிரதிபலனை இறுதியில் மக்களே அனுபவிக்க நேரிடும் - கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவிப்பு

(இராஜதுரை ஹஷான்)

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நிவாரண பாதீடா அல்லது பொருளாதார மேம்பாட்டுக்கான பாதீடா என்பதை அரசாங்கம் வெளிப்படையுடன் மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அரசாங்கத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்பதில் அரசாங்கம் தடுமாற்றமடைந்துள்ளது. இயலாவிடின் நாட்டுக்காக தெரிந்தவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் திங்கட்கிழமை (13) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு குறுகிய கால அடிப்படையில் அரசாங்கம் எடுத்த தீர்மானங்கள் தோல்வியடைந்துள்ள நிலையில் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பது சந்தேகத்துக்குரியது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து 12 வர்த்தமானிகளை வெளியிட்டு பின்னர் அவற்றை மீளப் பெற்றார்.

இறுதியாக 13 ஆவது தடவையாக வர்த்தமானி அறிவித்தலை பிரசுரித்து சிவப்பு அரிசியின் விலை 210 ரூபா, நாட்டு அரிசியின் விலை 220 ரூபா, சம்பா அரிசிக்கு 230 ரூபா என்ற அடிப்படையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டது.

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் ஒரு சில பகுதிகளில் அதிக விலைக்கு அரிசி விற்கப்படுகிறது. அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக குறுகிய கால அடிப்படையில் அரிசி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நீண்ட கால தீர்வு ஏதும் முன்வைக்கப்படவில்லை. அரிசி இறக்குமதிக்கான தடைகள் நீக்கப்படும்போது நடுத்தர அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

அரிசி தட்டுப்பாட்டுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பொறுப்புக்கூற வேண்டும் என்று நாங்கள் குறிப்பிடவில்லை.வர்த்தமானி வெளியிட்டோ அல்லது இராணுவத்தை கொண்டோ அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண முடியாது.

2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாறே அரிசி தட்டுப்பாடு தீவிரமடைந்திருந்தது. சிறந்த கொள்கைத் திட்டங்களை வகுத்து 210 நடுத்தர அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் 10000 விவசாயிகளை உள்ளடக்கி 8 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் 'சக்தி அரிசி கூட்டுறவு செயற்திட்டத்தை' ஆரம்பித்தோம்.

இதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்னர் அனைத்து வகையான தேசிய உற்பத்தி அரிசி வகைகளின் விலை 100 ரூபாவுக்கும் குறைவானதாக காணப்பட்டது.

ஆகவே தற்போதைய அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு சக்தி அரிசி கூட்டுறவு திட்டத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தியுள்ளோம். இருப்பினும் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இந்த திட்டத்துக்கு நாங்கள் வைத்த சக்தி அரிசி கூட்டுறவு திட்டம் என்ற பெயர் அரசாங்கத்துக்கு பிரச்சினை என்றால் தாராளமாக பெயரை மாற்றிக் கொண்டு இத்திட்டத்தை அமுல்படுத்தலாம்.

கூட்டுறவு திட்டம் அபிவிருத்தி செய்யப்பட்டால் மாத்திரமே நடுத்தர மக்களுக்கு நிவாரணமளிக்க முடியும். அதனால் பொருளாதாரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றார்.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் உள்ளடக்கத்தை உன்னிப்பாக அவதானித்துள்ளோம். நாட்டின் பொருளாதார நிலைவரம் தொடர்பில் அடிப்படை தெளிவு ஏதும் இல்லாமல் அரசாங்கம் தேர்தல் காலத்தில் பல வாக்குறுதிகளை வழங்கியது. வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நடைமுறைக்கு சாத்தியமற்றவை. அவற்றை செயற்படுத்தினால் பொருளாதார நெருக்கடி மீண்டும் தீவிரமடையும் இதுதான் உண்மை.

இந்த வரவு செலவுத் திட்டம் அரசியல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நிவாரண பாதீடா அல்லது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பாதீடா என்பதை அரசாங்கம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

நாட்டு மக்களை திருப்திப்படுத்துவதற்காக எடுக்கும் தவறான தீர்மானங்களின் பிரதிபலனை இறுதியில் மக்களே அனுபவிக்க நேரிடும். ஆகவே இவ்விடயத்தில் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

அரசாங்கத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்று அரசாங்கம் தடுமாற்றமடைந்துள்ளது. இயலாவிடின் நாட்டுக்காக தெரிந்தவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். நாட்டுக்காக நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்க நாங்கள் என்றும் தயாராகவுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment