அரசியல் தலையீடு இல்லாமல் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு செல்லும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே எமது நோக்கம் - அமைச்சர் விஜித்த ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Monday, January 27, 2025

அரசியல் தலையீடு இல்லாமல் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு செல்லும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே எமது நோக்கம் - அமைச்சர் விஜித்த ஹேரத்

(எம்.ஆர்.எம்.வசீம்)

இளைஞர், யுவதிகளை எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு செல்ல முடியுமான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே எமது நோக்கமாகும். அதற்காக பல மாற்றங்களை செய்ய வேண்டிவரும். அதேநேரம் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு தேசிய சுற்றுலா ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என வெளிவிவகார, சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

ஜப்பானில் தொழில் வாய்ப்பு தொடர்பில் அறிவுறுத்தும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (25) இலங்கை வேலை வாய்ப்பு பணியகத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், வெளிநாட்டு செலாவணியை நாட்டுக்கு பெற்றுக் கொள்ள முடியுமான பிரதான துறைகள்தான் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறைகளாகும். இந்த இரண்டு துறைகளையும் குறுகிய காலத்தில் கட்டியெழுப்புவதே எமது எதிர்பார்ப்பாகும்.

இன்று உலகம் முழுவதும் சுமார் மூன்றரை மில்லியன் இலங்கையர்கள் தொழில் வல்லுனர்களாக பல்வேறு துறைகளில் பணி புரிகின்றனர். ஒவ்வொரு நாளும் வெளிநாட்டு செலாவணியை அனுப்புகிறார்கள். வருடத்துக்கு சுமார் 6500 மில்லியன் டாெலர் வரை அனுப்புகிறார்கள்.

ஒரு நாடாக சுற்றுலாத் துறையிலும் வெளிநாட்டு செலாவணியை ஈட்டிக் கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாடு என்ற வகையில் நெருக்கடியில் இருந்து மீள எழுவதற்கு இது பாரியதொரு கை கொடுப்பாகும்.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களை பதிவு செய்து, கொரியா, ஜப்பான், இஸ்ரேல், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்புகிறோம்.
இந்த செயற்பாட்டில் எமது நாட்டு இளைஞர் யுவதிகளுக்கு பாரிய வாய்ப்புக்கள் கிடைத்து வருகின்றன. இவ்வாறு கிடைக்கும் சந்தர்ப்பங்களை நியாயமாகவும் எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல், அதேபோன்று செல்பவர்களுக்கு பாரியளவில் பணம் செலுத்தாத வகையில், நியாயமான முறையொன்றை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும்.

என்றாலும் வெளிநாட்டு தொழிலுக்கு அனுப்பும்போது பாரியளவில் பணம் அறவிடுவதாக எமக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கின்றன. அதேபோன்று இலட்சக்கணக்கில் முகவர் நிறுவனங்களுக்கு பணம் செலுத்தியதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கின்றன. இந்த விடயத்தில் கடந்த காலங்களில் எந்த வெளிப்டைத்தன்மையும் இடம்பெறவில்லை என்பதே இதன் மூலம் தெளிவாகிறது.

அதனால் குறுகிய காலத்தில் இந்த விடயங்களை சரி செய்து, இந்த நாட்டு இளைஞர் யுவதிகளை எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு செல்ல முடியுமான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே எமது நோக்கமாகும். அதற்காக பல மாற்றங்களை செய்ய வேண்டிவரும்.

சில சந்தர்ப்பங்களில் சட்ட திட்டங்களை மாற்ற வேண்டி வரும். இந்த விடயங்கள் குறித்து குற்றச்சாட்டுக்கள் வருவதை மாற்றியமைத்து, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் இந்த நாட்டு இளைஞர், யுவதிகளுக்கு நியாயமாக செயற்படும் இடம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும். அதற்காக இங்குள்ள அதிகாரிகளின் ஒத்துழைப்பு அவசியமாகும்.

அதேபோன்று சுற்றுலாத்துறை மேம்படுத்துவதற்கும் அதிகமான சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்காக தேசிய சுற்றுலா ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

No comments:

Post a Comment