(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
மின் கட்டணத்தை குறைக்க முடியாது என்று மின்சாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டார். ஆனால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 20 சதவீதத்தால் மின் கட்டணத்தை குறைத்துள்ளது. மின்சார சபையின் நிதி நிலைமை தொடர்பில் மின்சாரத்துறை அமைச்சர் சபைக்கு பொய்யுரைத்துள்ளார். அமைச்சருக்கு போலியான தகவல்களை வழங்கிய மின்சார சபையின் தலைவர் உட்பட அதிகாரிகள் பாராளுமன்ற சிறப்புரிமை மீறல் குழுவுக்கு அழைக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, 2025.01.09 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வின்போது மின் கட்டண திருத்தம் தொடர்பில் மின்சாரத்துறை அமைச்சரிடம் கேள்வியெழுப்பி, 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மின்சார சபை 167 பில்லியன் ரூபா இலாபமடைந்துள்ளது என்று குறிப்பிட்டேன்.
நான் முன்வைத்த விடயங்களை பொய் என்று மின்சாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டு, மின்சார சபை 332 பில்லியன் ரூபா கடனில் இருப்பதாக குறிப்பிட்டார். அத்துடன் இலாபமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுவதை நிரூபிக்குமாறு குறிப்பிட்டார்.
மின்சாரத்துறை அமைச்சரின் கருத்தை சுட்டிக்காட்டி அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா இலங்கை மின்சார சபை 2024.06.30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 119.29 பில்லியன் ரூபா இலாபமடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
ஆகவே மின் கட்டண திருத்தம் விவகாரத்தில் மின்சாரத்துறை அமைச்சர் பொய்யான தகவல்களை வழங்கி பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளார். இதனால் எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபைக்கும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் இடையில் 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பரிமாற்றிக் கொள்ளப்பட்ட கடிதங்களை முழுமையாக ஆராய்ந்து பார்த்துள்ளேன்.
இலங்கை மின்சார சபை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 145 பில்லியன் ரூபா இலாபடைந்துள்ளது. அத்துடன் இக்காலப்பகுதியில் 176.6 பில்லியன் ரூபா இலாபமடைந்துள்ளது.
ஆகவே பொய்யான தகவல்கள் பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சருக்கு தவறான தகவல்களை வழங்கிய மின்சார சபையின் தலைவர் உட்பட அதிகாரிகள் பாராளுமன்ற சிறப்புரிமை மீறல் குழுவுக்கு அழைக்கப்பட வேண்டும்.
மின் கட்டணத்தை குறைக்கப்போவதில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் கடந்த வாரம் குறிப்பிட்டார். ஆனால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 20 சதவீதத்தால் மின் கட்டணத்தை குறைத்துள்ளது.
2023 ஆம் ஆண்டு 9 இலட்சத்துக்கும் அதிகமானோரின் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2024 ஆம் ஆண்டு 6 இலட்சத்துக்கும் அதிகமானோரின் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே மின்சார சபையின் முறையற்ற நிர்வாகத்தினால் ஒட்டு மொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றார்.
No comments:
Post a Comment