புனித ஹஜ் கடமையினை இலங்கை யாத்திரீகர்கள் இந்த வருடம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கடந்த சனிக்கிழமை கைச்சாத்திட்டுள்ளது.
இலங்கை சார்பாக புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவியும் சவூதி அரேபியா சார்பில் அந்நாட்டின் ஹஜ் மற்றும் உம்ரா விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கலாநிதி அப்துல்பத்தா பின் சுலைமான் மஷாத் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இலங்கை ஹஜ் யாத்திரீகர்களுக்கு சிறப்பான சேவையினை வழங்கும் பொருட்டே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹஜ் யாத்திரிகை தொடர்பில் எதிர்காலத்தில் இலங்கை மேற்கொள்ளவுள்ள செயற் திட்டங்கள் தொடர்பில் சமய விவகார அமைச்சர் சவூதி அரேபிய அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த ஒப்பந்த கைச்சாத்து நிகழ்வில் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவர் அமீர் அஜ்வத், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் மற்றும் ஜித்தாவிலுள்ள இலங்கையின் பதில் கொன்சியூலர் ஜெனரல் மபூஸா லாபீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த விஜயத்தின்போது, ஹஜ் யாத்திரை காலப்பகுதியில் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனும் புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அலுவல் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி பேச்சு நடத்தியுள்ளார்.
ஜித்தாவிலுள்ள இலங்கை கொன்சியூலர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இலங்கையிலிருந்து இந்த வருடம் வரவுள்ள 3,500 ஹஜ் யாத்திரிகர்களுக்கும் நிறைவான மற்றும் சிறப்பான சேவையினை வழங்குவது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதேவேளை, இலங்கை யாத்திரிகர்களுக்கு மேற்படி சேவை வழங்குனர்களினால் வழங்கப்படவுள்ள சேவைகள் தொடர்பிலும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது இலங்கை தூதுக் குழுவினருடன் ஹஜ் குழுவின் தலைவர் றியாஸ் மிஹ்லாரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.
Vidivelli
No comments:
Post a Comment