கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காஷ்மீரில் உள்ள பஹல்கம் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 6 பயங்கரவாதிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (03) விசேட சோதனை நடத்தப்பட்டது.
இவ்வாறு சோதனைக்குள்ளாக்கப்பட்ட விமானம் சென்னையிலிருந்து வந்த ஒரு விமானமாகும்.
அண்மையில் இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள ஜம்மு-காஷ்மீரின், பஹல்கம் எனும் சுற்றுலா பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தற்போது பதற்ற நிலை அதிகரித்து வருகின்றன.
பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டி வரும் நிலையில், அதனுடனான வான் வழி தொடர்புகளைத் துண்டிப்பதாக அறிவித்திருந்த இந்தியா, பாகிஸ்தான் துறைமுகத்தில் தமது கப்பல்கள் தரிப்பதையும் பாகிஸ்தானிய கப்பல் இந்திய துறைமுகத்திற்கு வருவதையும் இடைநிறுத்துவதாக இன்று அறிவித்ததன் மூலம் கடல் வழித் தொடர்பையும் துண்டித்துள்ளது.
இதற்கிடையில், பஹல்கம் பயங்கரவாதிகளைக் கண்டுபிடிக்க இந்திய அரசாங்கம் தற்போது ஒரு பாரிய தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இந்தத் தாக்குதலில் தொடர்புடைய சந்தேகநபர்களைத் தேடி இந்திய பாதுகாப்புப் படையினர் பலரைக் கைது செய்திருந்தாலும், சந்தேகநபர்கள் இன்னும் தலைமறைவாக இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில், பஹல்கம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய 6 பயங்கரவாதிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று விடேச தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையில் இருந்து வந்த UL 122 எனும் ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானமே இவ்வாறு, சோதனை செய்யப்பட்டதாக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.
குறித்த விமானத்தில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் வந்துள்ளதாக சென்னை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளிடமிருந்து கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விமானம் சென்னையில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டு சிங்கப்பூருக்கு திரும்பிக் கொண்டிருந்ததாக இலங்கை விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிடைத்த தகவல்களின் அடிப்படையில், விமானப்படை மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு அதிகாரிகளும் குறித்த விமானத்தை சோதனையிட்டனர்.
ஆனால் விமானத்தில் வெடிகுண்டோ, சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவுமோ இல்லை என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து தெரிவித்துள்ள பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட விமானம் பரிசோதிக்கப்பட்ட போதிலும், அந்த விமானத்தில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாரும் நாட்டுக்குள் வந்ததாக எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று கூறினார்.
No comments:
Post a Comment