புகையிரத திணைக்களத்தில் பணி புரியும் தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் நேற்று (22) குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புகையிரத டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக திருகோணமலை பகுதியில் கைது செய்யப்பட்டதோடு, சந்தேகநபரிடம் இருந்து 92 ரயில் ஒன்லைன் டிக்கெட்டுகளும் மீட்கப்பட்டன.
அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக, இந்த டிக்கெட்டுகளை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிற பயணிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக தன்வசம் வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபர் மாத்தளை பகுதியில் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஏற்கனவே கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், 29 ஒன்லைன் டிக்கெட்டுகளை வைத்திருந்த ஒருவரைக் கைது செய்துள்ளதோடு, சந்தேகநபரிடமிருந்து சுமார் 131,000 ரூபா பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்களும் இன்று (23) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இவ்வாறு ஒன்லைன் டிக்கெட்டுகளை மாற்றி வேறு தரப்பினருக்கு இந்த சீட்டுகளை வழங்கியவர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment