(எம்.ஆர்.எம்.வசீம்)
அரசியலமைப்பின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளை இரத்துச் செய்யவோ குறைக்கவோ முடியாது. அதனால் செய்ய முடியாத விடயங்களை அரசாங்கம் வெளியில் தெரிவிக்காமல் இருப்பது நல்லது என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
காலி ஹினிதும தேர்தல் தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அரசியல் சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்ததில் இருந்து முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பிலே கதைத்து வருகிறது. அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டிருக்கிறது.
அதேநேரம் தற்போது அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உத்தியோகபூர் வீடு தொடர்பில் பல்வேறு கதைகளை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இந்த விடயங்களை அரசாங்கம் வெளியில் தெரிவிப்பதற்கு முன்னர் அது தொடர்பில் அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்களை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.
அரசியலமைப்பின் 36 (2) உறுப்புரையில், யாராவது ஒருவரினால் ஜனாதிபதி பதவி ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் பாராளுமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்வதற்கும் அதன் பின்னர் அவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ள ஓய்வூதியம் பெறுவதற்கும் அந்த நபர் உரிமையுடையவராவார்.
பின்னர் இந்த அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படும் திருத்தம், இந்த அரசியலமைப்பு முழுமையாக நீக்கப்படுதல் அல்லது மறுசீரமைப்பு செய்தல் மற்றும் இந்த அரசியலமைப்புக்கு உட்டபட்ட விடயம் ஒன்று பின்னர் ஏற்படுத்தப்பட்ட ஏதாவது ஒரு சட்டம் அல்லது சட்டத்தில் சில விதிமுறைகள் கடந்த காலத்துக்கு செல்லுபடியாகாது. அதாவது எந்த ஜனாதிபதியினதும் உரிமைகளை இல்லாமலாக்க முடியாது.
அதேபோன்று ஜனாதிபதி பதவியை வகிக்கும் நபர். சம்பளம் அல்லது கொடுப்பனவு, ஓய்வூதிய கொடுப்பனவு உரித்துரிமைகளை பாராளுமன்ற பிரேரணை ஒன்றின் மூலம் அதிகரித்துக் கொள்ள முடியும். என்றாலும் அந்த சம்பள கொடு்ப்பனவு ஓய்வூதிய உரித்துரிமைகளை குறைக்கக் கூடாது என்றே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விடயங்களை சரியாக வாசித்திருந்தால் அரசாங்கத்துக்கு இந்த விடயத்தில் காலத்தை வீணாக்க தேவை இருந்திருக்காது.
மேலும் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் 25 தடவைகள் வெளிநாடட்டு பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்து வருகிறார்கள். அவர் நட்டை பொறுப்பேற்றுக் கொண்டு வீட்டில் அடங்கி இருக்கவில்லை. அவர் நாட்டை பொறுப்பேற்று, நாட்டை கட்டியெழுப்ப முழு மூச்சுடன் செயற்பட்டு வந்தார்.
சர்வதேசத்துக்கு சென்று இந்த பிரச்சினைகளுக்கு தீர்வை தேடினார். அவர் செய்த அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியின் பெறுபேற்றினால்தான் வரிசைகளில் இருந்த மக்கள் வீடுகளுக்கு சென்றார்கள். அதனால்தான் வங்குராேத்து அடைந்திருந்த இந்த நட்டை ஒரு நிலைக்கு கொண்டுவந்திருக்கிறது.
ஆனால் ரணில் விக்ரமசிங்க இந்த விடயங்களை வெளியில் வந்து சொல்லிக் கொண்டிருக்கவில்லை. அதனால் இன்றைக்கும் இந்த நாட்டை பாதுகாக்க முடியுமான தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமாகும் என்றார்.
No comments:
Post a Comment