குளத்திற்கு 65 குடும்பங்களின் காணிகளை வீடுகளுடன் அபக்கரிக்க முயற்சி : நிலமைகளை நேரில் சென்று ஆராய்ந்தார் ரவிகரன் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 29, 2025

குளத்திற்கு 65 குடும்பங்களின் காணிகளை வீடுகளுடன் அபக்கரிக்க முயற்சி : நிலமைகளை நேரில் சென்று ஆராய்ந்தார் ரவிகரன் எம்.பி

கிளிநொச்சி - மாவட்டத்திற்குரிய கனகாம்பிகைக் குளத்தின் ஒதுக்கீட்டுக் காணிகள் எனத் தெரிவித்து முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட எல்லைக் கிராமங்களில் ஒன்றான இந்துபுரம் கிராமத்திலுள்ள மக்களின் தனியார் உறுதி மற்றும் அரச உத்தரவுப்பத்திரங்கள் வழங்கப்பட்ட காணிகள் மக்கள் குடியிருக்கின்ற வீடுகளுடன் அபகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசனத் திணைத்தினாலேயே இவ்வாறு எல்லைக் கற்கள் இடப்பட்டு ஆக்கிரமிப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இந்துபுரம் கிராமத்தைச் சேர்ந்த 65 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்துபுரம் கிராமத்திற்கு நேரடியாகச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இந்த அபகரிப்பு முயற்சி தொடர்பில் ஆராய்ந்ததுடன், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் இந்த அடாவடிச் செயற்பாட்டிற்குத் தனது கடுமையான கண்டனங்களையும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட இந்துபுரம் கிராமத்தில் கடந்த 1977 ஆம் ஆண்டு மக்கள் குடியேறி வசித்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த 1993ஆம் ஆண்டு இந்துபுரம் கிராம மக்களின் காணிகளுக்கு அரச காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நில அளவைப் படிவங்கள் காணவில்லை என தெரிவித்து கடந்த 2010 ஆம் ஆண்டில் மீண்டும் இந்துபுரம் கிராம மக்களின் காணிகள் அளவீடு செய்யப்பட்டு காணி அனுமதிப் பத்திரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அதன் பிற்பாடு குளத்திற்குரிய ஒதுக்கீட்டுக் காணிகள் அளவீடு செய்யப்பட்டு அவற்றுக்கு முறையாக எல்லைக் கற்கள் இடப்பட்டதுடன், மக்களின் காணிகளும் அளவீடு செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்ட அரச காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதுடன், அதன் பிற்பாடு தனியார் உறுதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு முறையாக அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு மக்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்ட தனியார் உறுதி மற்றும் அரச காணி அனுமதிப்பத்திரங்களுள்ள காணிகளையே கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களம் மீண்டும் அளவீடு செய்து, எல்லைக் கற்களையிட்டு இவ்வாறு அபகரிக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.

அதனடிப்படையில் அரச காணி அனுமதிப்பத்திரம் மற்றும் தனியார் உறுதிப்பத்திரமுள்ள 65 குடும்பங்களின் காணிகள் மக்கள் குடியிருக்கின்ற வீடுகளுடன் நீர்ப்பாசனத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழலில் அப்பகுதி மக்களின் முறைப்பாட்டிற்கமைய இந்துபுரம் கிராமத்திற்குச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலமைகள் குறித்து ஆராய்ந்ததுடன், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் குறித்த அடாவடிச் செயற்பாட்டிற்குத் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார்.

அத்தோடு இது தொடர்பில் உரிய தரப்பினருடன் பேசி இந்த ஆக்கிரமிப்புச் செயற்பாட்டைத் தடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment