முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கை தாக்கல் செய்யப் போவதாக சட்டமா அதிபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு நேற்று தெரிவித்துள்ளார்.
சுமார் பத்து வருட காலம் கடற்படையில் லெப்டினன்ட் ஒருவராக பணி புரிந்த யோஷித ராஜபக்ஷ பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்டார் என்றும் அக்காலப்பகுதியில் முறையற்ற விதத்தில் கோடிக்கணக்கான சொத்துக்களை சம்பாதித்துள்ளமை தொடர்பில் மேற்படி வழக்கைத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
நேற்றையதினம் சட்டமா அதிபரின் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் அது தொடர்பில் நீதிமன்றத்தில் விடயங்களை முன் வைத்துள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2006 ஆம் ஆண்டு கடற்படையில் இணைந்து கொண்டுள்ள யோஷித ராஜபக்ஷ 2016 ஆம் ஆண்டு பணி நீக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
2013 ஆம் ஆண்டு அவர் 500 இலட்சம் ரூபா பெறுமதியான காணி ஒன்றை கொள்வனவு செய்துள்ளதுடன் CSN தொலைக்காட்சி சேவையை நடத்தி பெருமளவு நிதியை சம்பாதித்துள்ளமை உள்ளிட்ட மேலும் பல விசாரணைகள் சிஐடியினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதற்கான வழக்கை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இரத்மலானை பிரதேசத்தில் 340 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதி கொண்ட காணியொன்றை கொள்வனவு செய்துள்ளமை தொடர்பான வழக்கு விசாரணையின்போதே அவர் இந்த விடயங்களை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment