சிவில் பாதுகாப்பு, காணி மற்றும் விவசாய திணைக்களங்களுக்கு பணிப்பாளர்கள் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 21, 2025

சிவில் பாதுகாப்பு, காணி மற்றும் விவசாய திணைக்களங்களுக்கு பணிப்பாளர்கள் நியமனம்

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு மேஜர் ஜெனரல் கே.எச்.பீ. பாலித பெர்னாண்டோவை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவி 2025.01.01 தொடக்கம் வெற்றிடமாகவுள்ளது.

இலங்கை இராணுவத்தின் ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் கே.எச்.பீ. பாலித பெர்னாண்டோவை சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிப்பது பொருத்தமெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, அவரை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஒப்பந்த அடிப்படையில் ஒரு வருடத்திற்கு நியமிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

காணி ஆணையாளர் நாயகம் பதவிக்கு ஆர்.ஏ.சந்தன சமன் ரணவீர ஆராச்சியை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் மேலதிக செயலாளர் (காணி) பதவியில் கடமையாற்றிய, இலங்கை நிர்வாக சேவை விசேடதர அதிகாரியான, டீ.டீ.கே.விக்கிரமராச்சி, அவருடைய நிரந்தரப் பதவிக்கு மேலதிகமாக 2024.12.12 தொடக்கம் காணி ஆணையாளராகப் பதில் கடமைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்திணைக்களத்தில் சேவைகளின் நிமித்தம், பிரதேச நிர்வாக அனுபவங்களைக் கொண்டுள்ள அதிகாரியொருவரை நிரந்தரமாக நியமிக்க வேண்டிய தேவை உள்ளது.

அதற்கமைய, தற்பாது பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் உள்நாட்டலுவல்கள் பிரிவின் மேலதிக செயலாளராக (நிர்வாகம்) கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவை விசேடதர அதிகாரியான, ஆர்.ஏ.சந்தன சமன் ரணவீர ஆராச்சியை காணி ஆணையாளராக நியமிப்பது பொருத்தமெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அவரை காணி ஆணையாளராக நியமிப்பதற்கு விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

விவசாய பணிப்பாளர் நாயகம் பதவிக்கு திருமதி கலாநிதி ஈ.ஆர்.எஸ்.பீ.எதிரிமான்னவை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

விவசாய பணிப்பாளர் நாயகம் பதவியில் தற்போது கடமையாற்றுகின்ற திருமதி கே.என்.எஸ்.ரணதுங்க 2025.01.21 தொடக்கம் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.

அன்று தொடக்கம் வெற்றிடமாகவுள்ள பணிப்பாளர் நாயகம் பதவிக்கு புதிய அதிகாரியொருவரை நியமிக்க வேண்டியுள்ளது.

குறித்த பதவிக்கு தற்போது விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் மேலதிக செயலாளர் (விவசாய தொழில்நுட்பம்) பதவியில் கடமையாற்றுகின்ற இலங்கை விவசாய சேவையின் விசேடதர அதிகாரியான திருமதி கலாநிதி ஈ.ஆர்.எஸ்.பீ.எதிரிமான்னவை நியமிப்பதற்காக விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று முன்தினம் (20) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு 11 தீர்மானங்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment